டில்லி அணி அசத்தல் வெற்றி: கடைசி ஓவரில் வீழ்ந்தது பெங்களூரு

பெங்களூரு: கடைசி ஓவரில் மில்லர் விளாசல் கைகொடுக்க, டில்லி அணி ‘திரில்’ வெற்றி பெற்றது.

பெங்களூரு, சின்னசாமி மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ பெங்களூரு, டில்லி அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற டில்லி கேப்டன் அக்சர் படேல், ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.

பச்சை நிற ஜெர்சி: பசுமையான சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வுக்காக, மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களில் தயாரான பச்சை நிற ‘ஜெர்சி’ அணிந்து பெங்களூரு அணியினர் விளையாடினர். விராத் கோலி, பில் சால்ட் சுமாரான துவக்கம் தந்தனர். 5 ஓவரில் 52/0 ரன் எடுக்கப்பட்டன. நிகிடி ‘வேகத்தில்’ கோலி (19) வெளியேறினார். அக்சர் படேல் ‘சுழலில்’ தேவ்தத் படிக்கல் (18) சிக்கினார். சால்ட், 63 ரன்னுக்கு (38 பந்து, 4×4, 3×6) அவுட்டானார். கேப்டன் ரஜத் படிதார் (8) சோபிக்கவில்லை. அக்சர் படேல் பந்தில் ‘அதிரடி’ டிம் டேவிட் (26) நடையை கட்ட, சிக்கல் ஏற்பட்டது. நடராஜன் (2 ஓவர், 16 ரன்) கட்டுக்கோப்பாக பந்துவீச, ஸ்கோர் வேகம் குறைந்தது. பெங்களூரு அணி 20 ஓவரில் 175/8 ரன் எடுத்தது.

புவனேஷ்வர் அசத்தல்: சவாலான இலக்கை விரட்டிய டில்லி அணி, புவனேஷ்வர் குமார் ‘வேகத்தில்’ அதிர்ந்தது. முதல் ஓவரில் நிசங்காவை (1) அவுட்டாக்கினார். அடுத்த ஓவரில் கருண் நாயர் (2), ரிஸ்வியை (2) வெளியேற்றினார். தனது முதல் இரு ஓவரில் 9 ரன் மட்டும் கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார். டில்லி அணி 3 ஓவரில் 22/3 ரன் எடுத்து தவித்தது.

ராகுல் அரைசதம்: பின் கே.எல்.ராகுல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அசத்தினர். ஹேசல்வுட் ஓவரில் ராகுல் (6,4,4) விளாச, 14 ரன் எடுக்கப்பட்டன. குர்ணால் பாண்ட்யா பந்தில் ராகுல் (57 ரன், 34 பந்து, 6×4, 2×6) அவுட்டானார். கேப்டன் அக்சர் படேல் (26) கால் தசை பிடிப்பு காரணமாக ‘ரிட்டையர்டு ஹர்ட்’ முறையில் ‘பெவிலியன்’ திரும்பினார். ஸ்டப்ஸ் அரைசதம் கடந்தார்.

மில்லர் 6,6,4 ஜோர்: கடைசி ஓவரில் டில்லி வெற்றிக்கு 15 ரன் தேவைப்பட்டன. ரொமாரியோ ஷெப்பர்டு பந்துவீசினார். முதல் இரு பந்துகளில் 2 ரன் கிடைத்தன. பின் ‘கில்லர்’ டேவிட் மில்லர் மிரட்டினார். 3,4வது பந்தில் வரிசையாக இரு சிக்சர் அடித்தார். 5வது பந்தில் பவுண்டரி அடித்து, வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் குஜராத்திற்கு எதிராக, கடைசி 2 பந்தில் 2 ரன் எடுக்க முடியாமல் செய்த தவறுக்கு பரிகாரம் தேடினார். டில்லி அணி 19.5 ஓவரில் 179/4 ரன் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஸ்டப்ஸ் (60), மில்லர் (22) அவுட்டாகாமல் இருந்தனர்.

100வது போட்டி

கிரிக்கெட் லீக் வரலாற்றில் ஒரே மைதானத்தில் (சின்னசாமி) 100 போட்டியில் விளையாடிய முதல் என்ற பெருமையை பெங்களூரு நேற்று பெற்றது. அடுத்த இடத்தில் கோல்கட்டா அணி (98 போட்டி, ஈடன் கார்டன் மைதானம்) உள்ளது.

* கிரிக்கெட் லீக் அரங்கில் குறைந்த பந்தில் 1000 ரன் எடுத்தவர் பட்டியலில் டிம் டேவிட் 2வது இடம் (560 பந்து) பெற்றார். முதலிடத்தில் ரசல் (545) உள்ளார்.

Source link