புதுடில்லி: டில்லியில் உள்ள ஜே.என்.யு., எனப்படும், ஜவஹர்லால் நேரு பல்கலையில் பணிபுரியும் பேராசிரியர் மீது 10க்கும் மேற்பட்ட மாணவியர் பாலியல் புகார் அளித்ததை அடுத்து, விசாரணை தொடங்கியுள்ளது.
டில்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலை செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்த பல்கலையில் டில்லி மட்டுமின்றி நாடு முழுதும் இருந்தும் ஏராளமான மாணவ – மாணவியர் பயின்று வருகின்றனர். இந்த பல்கலையின் பணிபுரியும் பேராசிரியர் ஒருவர் மீது பாலியல் புகார் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பல்கலை வளாகத்திலேயே தங்கியுள்ள அந்த பேராசிரியர், மாணவிகளை தன் இல்லத்திற்கு அழைத்து பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொள்ள முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நடந்த வாய்மொழி தேர்வின்போது, மாணவியரிடம் ஆபாசமான கருத்துகளை அவர் தெரிவித்ததாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.
தேர்வு முடிந்து செமஸ்டர் விடுமுறைக்கு பின், கடந்த ஜூலையில் பல்கலை வகுப்புகள் தொடங்கியபோது, மாணவி ஒருவர் பேராசிரியரின் செயல்கள் குறித்து, ‘வாட்ஸாப்’ குழுவில் பகிர்ந்தபோது, இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. அவரைத் தொடர்ந்து, மேலும் சில மாணவியர் பேராசிரியருக்கு எதிராக கருத்துகளை தெரிவித்தனர்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவியர் 11 பேர், பல்கலை புகார் குழுவிடம் பேராசிரியர் மீது புகார் கூறினர். அதில், தான் சொல்வதை கேட்காவிட்டால், தேர்வில் மதிப்பெண்களை குறைத்துவிடுவதாக பேராசிரியர் மிரட்டியதாகவும் குற்றஞ்சாட்டினர். பாதிக்கப்பட்ட மாணவியருக்கு ஆதரவாக, மூத்த மாணவர்களும் போர்க்கொடி உயர்த்தியுள்ளதால் பல்கலை வளாகத்தில் பதற்றம் நிலவுகிறது.
மாணவியரின் புகாரை ஏற்றுககொண்ட புகார் குழு, அது தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களிடம் நேரடி வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இது தொடர்பாக பல்கலை துணைவேந்தர் அலுவலகமோ, மாணவர் பேரவையோ அறிக்கை எதுவும் வெளியிடவில்லை. புகாருக்கு ஆளான பேராசிரியர் குறித்த விபரங்களும் வெளியிடப்படவில்லை.
கடந்தாண்டு ஏப்ரலில், இதே பல்கலையின் சர்வதேச கல்விகள் பிரிவு மூத்த பேராசிரியர் ஒருவர் மீது பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர் உட்பட நான்கு பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
