புதுடில்லி: டில்லி முன்னாள் தலைமைச் செயலாளர் ராகேஷ் மேத்தா நொய்டாவில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார்.
டில்லியின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராகேஷ் மேத்தா. இவருக்கு வயது 74. இவர் நொய்டாவில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார். உடல்நல பிரச்னைகளே தனது இந்த முடிவுக்குக் காரணம் என அவர் எழுதியிருந்த கடிதத்தை போலீசார் மீட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
1975ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ராகேஷ் மேத்தா, முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் கீழ் பணியாற்றியிருந்தார். இவர் டில்லி மாநகராட்சி கமிஷனர் உட்பட பல்வேறு பதவிகளில் டில்லி அரசில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
இவர் 2007ல் டில்லியின் தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்று, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றினார். டில்லியில் முக்கியப் போக்குவரத்து, மின்சாரம் மற்றும் குடிமை உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்திய பெருமை பெற்றுள்ளார். டில்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2010ம் ஆண்டு அவரது பதவிக்காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டன.
