காரைக்குடி: நான் கூட டோக்கனை வாங்கிட்டு போய் ஐயா கிட்ட கொடுத்து இந்த டோக்கனை வச்சிகிட்டு இந்த முதல்வர் பதவியை கொடுங்கன்னு கேட்க போறேன் என சீமான் தெரிவித்துள்ளார்.
காரைக்குடியில் தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேசியதாவது: காசு, பணம் காரை தங்கள் பிள்ளைகளுக்கு வைத்து விட்டு போக வேண்டும் என்று நினைக்கிறார்கள். நாங்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க வைத்து விட்டு போக நினைக்கிறோம்.
இவர்கள் தங்கத்தை பிள்ளைகளுக்கு வைத்து விட்டு போக வேண்டும் என்று நினைக்கிறார்கள். நான் குடிக்க நல்ல தண்ணீரை வைத்து விட்டு போக வேண்டும் என்று நினைக்கிறேன். நாங்கள் நஞ்சில்லாத சோற்றை வைத்து விட்டு போக வேண்டும் என்று நினைக்கிறோம்.
இவர்கள் ஓட்டுக்கு காசு கொடுத்து ஓட்டுக்களை பறிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். எனக்கு காசு இல்லை, இருந்தாலும் நான் தரமாட்டேன். இது எனது கொள்கை முடிவு. உனக்கு சேவை செய்ய நான் ஏன் காசு தர வேண்டும்.
நீங்கள் என்னை தேர்வு செய்தால் நான் சேவை செய்வேன். பணத்துக்கு வாக்கு, எனது இனத்துக்கு தூக்கு, அதன் மானத்துக்கு தூக்கு. நோட்டுக்கு ஓட்டு நாட்டுக்கு வேட்டு. நான் ஜனநாயகத்தை காப்பாற்ற நினைக்கிறேன். கேடுகெட்ட பணநாயகத்தை கையில் எடுக்க மாட்டேன்.
காசு கொடுக்குறது மூன்று கட்சிகள். இலவசம் அது ஏமாற்று, வளர்ச்சி அல்ல வீழ்ச்சி, கவர்ச்சி. அதனை மூன்று கட்சிகளும் சொல்கிறது. ரூ.2000, ரூ. 2500 என்று சொல்கிறது. 8 ஆயிரம் ரூபாய் டோக்கன், ரூ.10,000 டோக்கன்.
ஓட்டுக்கு டோக்கன். சேர, சோழ பரம்பரை, அவர்களது சொத்துக்களை விற்றுவிட்டுக் கொடுக்கிறார்கள். 8 ஆயிரம் ரூபாய் டோக்கன் எந்த கடையினாலும் கொடுத்து எது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். டோக்கனை வாங்கிட்டு வா அந்த கடையில் கொடுத்து கடையை எழுதி கொடு என்று கேட்போம்.
யாராவது கொடுக்கிறானா என்று பார்ப்போம். நான் கூட டோக்கனை வாங்கிட்டு போய் ஐயா கிட்ட கொடுத்து இந்த டோக்கனை வச்சிகிட்டு இந்த முதல்வர் பதவியை கொடுங்கன்னு கேட்க போறேன். மக்களின் வாழ்க்கை வறண்டு போய்விட்டது. என்னை டாக்டர் இரண்டு மாதம் பேசக்கூடாது என்று சொன்னார்.
நான் பேசவில்லை நீங்கள் போய் பேசி விட்டு வருகிறீர்களா என்று கேட்டதற்கு இந்த மாதிரி பேசக்கூடாது என்றார். இரண்டு மாதம் பேசக்கூடாது என்று சொன்னதற்கு வேறு ஏதாவது மருந்து இருந்தால் சொல்லுங்க என்றேன். ஒன்னும் கிடையாது போய்விட்டு வா என்று சொல்லிவிட்டார். இவ்வாறு சீமான் பேசினார்.
