-நமது நிருபர்-
ரூ.2.12 லட்சம் கோடி மதிப்பிலான ஆயுதக் கொள்முதலுக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது. அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
82 சதவீத ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் இந்திய உள்நாட்டு பாதுகாப்புத் துறையிடமிருந்தே கொள்முதல் செய்யப்படவுள்ளன. இது சுயசார்பு இந்தியா திட்டத்திற்கு மிகப்பெரிய ஊக்கமாக அமையும்.
நவீன போர்க்கள அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, மிகக் குறுகிய தூர ஏவுகணைத் தடுப்புக் கவசங்கள், கண்காணிப்பு, தாக்குதல் நடத்தும் ட்ரோன்கள், எதிரி ட்ரோன்களை அழிக்கும் தொழில்நுட்பங்கள், நீண்ட தூரம் சென்று தாக்கும் தற்கொலை ட்ரோன் அமைப்புகள், வானிலை ரேடார்கள் உள்ளிட்டவை கொள்முதல் செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ராணுவம் மட்டுமின்றி இந்திய கடற்படை, விமானப்படைக்கான ஏவுகணை தடுப்பு உபகரணங்கள், வான் பாதுகாப்பு ரேடார்கள், நவீன தளவாடங்களும் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
