சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள, 82 மின் தடை நீக்கும் மையங்களுக்கான வாகன சேவையை, மின்துறை அமைச்சர் நிர்மல்குமார், சென்னையில் இன்று (அக்.,26) தொடங்கி வைத்தார்.
மின்சாதன பழுதுகளை விரைவாக சரிசெய்ய, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில், ஏற்கனவே செயல்பட்டு வந்த, 70 மின் தடை நீக்கும் மையங்களுடன், கூடுதலாக, 82 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த மையங்களுக்கான வாகன சேவையை அமைச்சர் நிர்மல்குமார், சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில் இன்று தொடங்கி வைத்தார். மின் வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின், நிர்மல்குமார் கூறியதாவது:
மின் சாதன பழுதுகளை சரிசெய்ய, 2,500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு வாகனத்திலும் நான்கு முதல் ஐந்து பேர் இருப்பர்.
இந்த வாகனங்கள், ஏதேனும் ஓர் இடத்தில் மின் சாதன பிரச்னை ஏற்பட்டால், விரைந்து சென்று பழுதை சரிசெய்ய உதவும்.
உயர் மின்னழுத்த பாதையில் ஏற்படும் பழுதை சரிசெய்ய, 12 வாகனங்கள் பயன்படுத்தப்படும். வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, மானியம் வழங்கும் திட்டத்தில் இதுவரை, 28 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துஉள்ளன.
அவற்றுக்கு விரைவாக அனுமதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
