தங்கம் விக்குற விலையில கோல்டுல ரோடு போடுறாங்க; அதுவும் 24 கேரட்ல: அலப்பறையை கூட்டும் நாடு

உலக அளவில் தற்போது தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்நிலையில், துபாய் தனது பிரம்மாண்டமான வானளாவிய கட்டிடங்களுக்கு மத்தியில் மற்றொரு தங்கப் பிரம்மாண்டத்தைச் சேர்க்க தயாராகி வருகிறது. இந்த முறை, மக்கள் தங்கத்தின் மீதே நடந்து செல்லும் வகையில் விசித்திரமான அனுபவம் ஒன்றை வழங்கவுள்ளது. 

செல்போன் இல்ல; கார் இல்ல… அப்புறம் எதுக்கு ரூ.1 லட்சம் கொடுத்து இந்த பேய் தீவுக்கு போறாங்க?

‘துபாய் கோல்டு டிஸ்ட்ரிக்ட்’ (Dubai Gold District), உலகின் முதல் மற்றும் மிக நீண்ட 24-காரட் தங்க நடைபாதையை 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் திறக்கத் திட்டமிட்டுள்ளது. துபாய் கோல்டு டிஸ்ட்ரிக்ட்டின் வணிகத் துறையின் மூத்த இயக்குநர் ரஷித் அல் ஹர்முடி தெரிவித்துள்ளபடி, இந்த தங்க நடைபாதை இன்னும் இரண்டு மாதங்களுக்குள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்க வர்த்தகம், நகைக் கொள்முதல் மற்றும் சுற்றலாவில் சர்வதேச அளவில் தனது இடத்தை மேலும் வலுப்படுத்த துபாய் இந்த அதிரடி திட்டத்தை கையில் எடுத்துள்ளது. பாரம்பரிய தங்க சந்தைகள் முதல் முதலீட்டு தங்க கட்டிகள் வரை அனைத்தையும் வழங்கி வந்த துபாய், தற்போது தங்கத்தையே ஒரு நேரில் உணரும் அனுபவமாக மாற்றவுள்ளது. இந்த நடைபாதையின் துல்லியமான நீளம், கட்டுமானச் செலவு மற்றும் திறப்பு விழா தேதி ஆகியவை குறித்த விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை.

துபாய் கோல்டு டிஸ்ட்ரிக்ட்டின் மெகா பிளான்

இந்த தங்க நடைபாதை, துபாய் கோல்டு டிஸ்ட்ரிக்ட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாகும். டேராவில் அமைந்துள்ள இந்த மையம், 2026 ஜனவரியில் தங்க சில்லறை விற்பனை, ஆபரணங்கள், மொத்த வர்த்தகம் மற்றும் முதலீடுகளுக்கான பிரத்யேக தளமாகத் தொடங்கப்பட்டது.

துபாய் மீடியா ஆபிஸ் தகவலின்படி, இங்கு தங்கம், ஆபரணங்கள், வாசனை திரவியங்கள் மற்றும் லைஃப்ஸ்டைல் சார்ந்த 1,000-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனைக் கடைகள் இயங்கி வருகின்றன. மேலும், மத்திய கிழக்கிலேயே மிகப்பெரிய தங்கம் மற்றும் ஆபரண கண்காட்சியை நடத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது. 2026 ஆரம்பத்திலிருந்து இங்கு மொத்த தங்க வர்த்தக அலுவலகங்கள் 20%-மும், புதிய நகைக் கடைகள் 15%-மும் அதிகரித்துள்ளன.

கின்னஸ் சாதனை படைத்த 16.5 கிலோ ‘ஜிமிக்கி’

தங்க நடைபாதை அறிவிப்புடன் சேர்த்து, துபாய் மற்றொரு கின்னஸ் உலக சாதனையையும் படைத்துள்ளது. ஜோயாலுக்காஸ் நகைக்கடை தயாரித்த பாரம்பரிய ‘மயிலாசனக் கம்மல்’  ஜோடி  உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக எடையுள்ள கம்மல்களுக்கான 2 கின்னஸ் சாதனைகளைப் பெற்றுள்ளது.

22-காரட் தங்கத்தால் செய்யப்பட்ட இந்த ‘மயூரா சஹஸ்ரா’ (ஆயிரம் மயில்கள்) என்ற ஜிமிக்கி ஜோடி, 16.514 கிலோகிராம் எடை கொண்டது. அக்டோபர் 24 அன்று ஐக்கிய அரபு அமீரக பொருளாதார மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் அப்துல்லா பின் தௌக் அல் மர்ரி முன்னிலையில் இது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஜிமிக்கி விற்பனைக்கு அல்லாமல், பொதுமக்களின் பார்வைக்காக துபாயில் நிரந்தரமாகக் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

Source link