பீகார் மாநிலம், பாட்னாவில் முன்னாள் முதல்வர் கிருஷ்ண சிங்கின் 139 வது பிறந்தநாள் விழாவில் காங்கிரஸ் தலைவர் கார்கே கலந்துகொண்டு பேசினார். அவர் பேசுகையில், ”வாக்குத்திருட்டில் ஈடுபட்டவர்கள் சி@@கு செல்வார்கள்” எனப் பேசினார்.
அப்போது பார்வையாளர்களில் ஒருவர், ”நரேந்திர மோடி சி@@கு போக மாட்டார்” எனக் கோஷமிட்டார். அப்போது, உணர்ச்சிவசப்பட்ட கார்கே, ”நரேந்திர மோடியும் போவார்… அவரது அப்பாவும் போவார்…” என்று ஆவேசமாகப் பேசினார். இது சம்பந்தமான வீடியோ வெளியாகி வைரலானது. இந்நிலையில், பாஜகவினர் இதற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாஜகவினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, டெல்லி, லக்னோ, பெங்களூரு, ஜம்மு, பாட்னா என நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடியின் மறைந்த தந்தை குறித்து ஒருமையில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள், கார்கே தனது பேச்சுக்காக மன்னிப்பு கோர வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ராஜ்நாத் சிங், “பிரதமர் நரேந்திர மோடியின் மறைந்த தந்தை குறித்த கார்கேவின் பேச்சு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது, பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இவ்வாறு பேசியது ஒரு சாதாரண தொண்டரோ, இளம் தலைவரோ அல்ல. நாட்டின் மிகப் பழமையான அரசியல் கட்சியான, ஒரு தேசிய கட்சியின் தலைவரே இவ்வாறு பேசியுள்ளார். இது மிகவும் வருந்தத்தக்க விஷயம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
