கிளாஸ்கோ: காமன்வெல்த் பாரா விளையாட்டில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என சாதனை படைத்தார் ஷர்மிளா.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், காமன்வெல்த் விளையாட்டு 23வது சீசன் நடக்கிறது. மாற்றுத்திறனாளி வீராங்கனைகளுக்கான ‘எப் 57’ பிரிவில் குண்டு எறிதல் போட்டி நடந்தது. இந்தியா சார்பில் ஷர்மிளா தங்கர் 40, ஷில்பா 37, பங்கேற்றனர்.
இடுப்பு பகுதிக்கு கீழ் பாதிக்கப்பட்டதால், சேரில் உட்கார்ந்த நிலையில் குண்டு எறிந்தனர். முதல் இரண்டு வாய்ப்பில் ஷர்மிளா 9.48, 9.58 மீ., துாரம் எறிந்தார். மூன்றாவது வாய்ப்பில் அதிகபட்சம் 9.81 மீ., துாரம் எறிந்தார். அடுத்த மூன்று வாய்ப்பிலும் (9.17, 9.37, 9.60) சோபிக்கவில்லை. இதையடுத்து முதலிடம் பிடித்த ஷர்மிளா (9.81 மீ.,) தங்கப்பதக்கம் கைப்பற்றினார். காமன்வெல்த் பாரா விளையாட்டில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என புதிய சாதனை படைத்தார். கானாவின் ஜினபு இசா (8.65) வெள்ளி வென்றார்.
ஷில்பா வெண்கலம்
இந்தியாவின் ஷில்பா, மூன்றாவது வாய்ப்பில் அதிகபட்சம் 7.26 மீ., துாரம் எறிய, மூன்றாவது இடம் பெற்றார். அடுத்து, பாராலிம்பிக்கில் இரு பதக்கம் வென்ற, நடப்பு காமன்வெல்த் சாம்பியன். நைஜீரியாவின் இயுசாரியா 8.19 மீ., துாரம் எறிய, மூன்றாவது இடத்துக்கு முன்னேறினார். ஷில்பா 4வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
எனினும், இந்திய அணி தரப்பில் இயுசாரியா, செயல்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ‘ரிவியூ’ செய்த நடுவர் குழு, இயுசாரியாவை தகுதி நீக்கம் செய்தது. முடிவில் ஷில்பாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
சர்வேஷ் ‘வெள்ளி’
ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டி நடந்தது. இந்தியா சார்பில் சர்வேஷ் அனில் குஷாரே, ஆதர்ஷ் ராம், தேஜஸ்வின் சங்கர் என மூன்று பேர் பங்கேற்றனர்.
இதில் சிறப்பாக செயல்பட்ட சர்வேஷ், 2.25 மீ., உயரத்தை மூன்றாவது வாய்ப்பில் தாவி, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். இதே உயரத்தை முதல் வாய்ப்பில் தாவிய ஜமைக்க வீரர் ரொமெய்னே (2.25) தங்கப்பதக்கம் வென்றார். இங்கிலாந்தின் கிமானி ஜாக் (2.20) வெண்கலம் கைப்பற்றினார். ஆதர்ஷ் ராம் (2.15), 5வது இடம் பெற்றார்.
அஜயா அசத்தல்
ஆண்களுக்கான 79 கிலோ பிரிவில் பளுதுாக்குதல் போட்டி நடந்தது. இந்தியா சார்பில் வல்லுரி அஜயா பாபு 21, பங்கேற்றார். ‘ஸ்னாட்ச்’ பிரிவில் 149 கிலோ துாக்கி, காமன்வெல்த் சாதனை படைத்தார். அடுத்து ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ பிரிவில் 181 கிலோ பளுதுாக்கினார். ஒட்டுமொத்தமாக 330 கிலோ பளுதுாக்கிய அஜயா பாபு, வெள்ளிப்பதக்கம் வென்றார். நடப்பு காமன்வெல்த் விளையாட்டு பளுதுாக்குதலில் இந்தியா கைப்பற்றிய 6வது பதக்கம் (1 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலம்) இது ஆனது.
இவரை விட 1 கிலோ அதிகம் (331) துாக்கிய மலேசிய வீரர் எர்ரி ஹிதாயத் முகமது (147+184) முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
போலியோ பாதிப்பு
ஹரியானாவின் ரேவரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஷர்மிளா 40. இவரது 2 வயதில் ஏற்பட்ட போலியோ பாதிப்பு காரணமாக ஒரு கால் செயலிழந்தது. 2018ல் மாநிலத்தில் நடந்த ‘ஸ்டிரைக்’ காரணமாக, முதல் பெண் நடத்துனர் ஆனார். 10 நாளுக்குப் பின் ஸ்டிரைக் முடிவுக்கு வர, ஷர்மிளா பணி பறிபோனது. பின் கணவர் அஜித் ‘அட்வைஸ்’ படி, பாரா குண்டு எறிதலில் (உட்கார்ந்த நிலையில்) ஈடுபட்டார். பயிற்சிக்காக வீட்டை விற்றார்.
2022 காமன்வெல்த்தில் நான்காவது இடம் பெற்றிருந்தார். இவரது இரண்டு மகள்கள் அனுஜ் 17, (ஈட்டி எறிதல்), லட்சுமி 13, (நீளம் தாண்டுதல்) தடகள வீராங்கனைகளாக உள்ளனர்.
‘ஆசிரியர்’ வீராங்கனை
கர்நாடகாவின் மைசூரு மாவட்டத்தின் காஞ்சிகரா கோப்பலு கிராமத்தை சேர்ந்தவர் ஷில்பா. நான்கு வயதில் வேகமாக சென்ற ‘டிரக்’ மோதியதால் இடது காலை இழந்தார். இருப்பினும் பட்ட மேற்படிப்பு முடித்த இவர், ஆசிரியர் பயிற்சி பட்டமும் பெற்றார். பின் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த ஷில்பா, பாரா விளையாட்டில் ‘கால்’ பதித்தார். தற்போது காமன்வெல்த்தில் சாதித்துள்ளார்.
முதல் ‘வெள்ளி’
காமன்வெல்த் விளையாட்டு உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்ற முதல் இந்தியர் ஆனார் சர்வேஷ். முன்னதாக 2022ல் தேஜஸ்வின் சங்கர், வெண்கலம் வென்றிருந்தார்.
அப்பா வழியில்…
ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கொண்டவெலகெடா கிராமத்தை சேர்ந்தவர் வல்லுரி அஜயா பாபு 21. இவரது தந்தை வல்லுரி சீனிவாச ராவ். கடந்த 2010ல் டில்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு பளுதுாக்குதலில் 56 கிலோ பிரிவில் வெண்கலம் வென்றிருந்தார்.
தற்போது 16 ஆண்டுக்குப் பின், இவரது மகன் அஜயா பாபு, காமன்வெல்த் பளுதுாக்குதலில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதித்துள்ளார்.
இந்தியா வென்ற பதக்கங்கள்
வீரர்/வீராங்கனை போட்டி பதக்கம்
மீராபாய் சானு பளுதுாக்குதல் தங்கம்
ஷர்மிளா பாரா குண்டு எறிதல் தங்கம்
ரிஷிகாந்தா பளுதுாக்குதல் வெள்ளி
ராஜா பளுதுாக்குதல் வெள்ளி
ஞானேஷ்வரி பளுதுாக்குதல் வெள்ளி
சர்வேஷ் உயரம் தாண்டுதல் வெள்ளி
அஜயா பாபு பளுதுாக்குதல் வெள்ளி
பிந்தியாராணி பளுதுாக்குதல் வெண்கலம்
ஷில்பா பாரா குண்டு எறிதல் வெண்கலம்
ஜண்டு குமார் பாரா ‘பவர் லிப்டிங்’ வெண்கலம்
குத்துச்சண்டை: பதக்கம் உறுதி
பெண்களுக்கான குத்துச்சண்டை 54 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பிரீத்தி, வடக்கு அயர்லாந்தின் நிகோல் கிளைடை சந்தித்தார். இதில் பிரீத்தி 5-0 என வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார். குறைந்தபட்சம் ஒரு பதக்கத்தை உறுதி செய்தார்.
பெண்களுக்கான குத்துச்சண்டை, 51 கிலோ பிரிவில் ‘ரவுண்டு-16’ சுற்று நடந்தது. இந்தியாவின் சாக்சி, போஸ்னியாவின் லெதாபோவை எதிர்கொண்டார். மூன்று சுற்றிலும் ஆதிக்கம் செலுத்திய சாக்சி, 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.
* ஆண்களுக்கான 70 கிலோ பிரிவு, ‘ரவுண்டு-16’ போட்டியில் இந்தியாவின் சுமித், 1-4 என்ற கணக்கில் இங்கிலாந்தின் ஜான் மெக்கோனலிடம் தோல்வியடைந்தார்.
அரையிறுதியில் ஸ்ரீஹரி
ஆண்களுக்கான நீச்சலில் 100 மீ., பேக்ஸ்டிரோக் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ் பங்கேற்றார். தகுதிச்சுற்றில் 5வது இடம் (55.58 வினாடி) பிடித்தார். ஒட்டுமொத்தமாக 13வது இடம் பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
* பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கான நீச்சல், 50 மீ., பிரீஸ்டைல் ‘எஸ் 13’ பிரிவில் இந்தியாவின் புதிகினா (26.33), அலி இமாம் (28.41) பைனலுக்கு தகுதி பெற்றனர்.
* 200 மீ., பட்டர்பிளை பிரிவில் இந்தியாவில் சாஜன் பிரகாஷ் பங்கேற்றார். தகுதிச்சுற்று 2ல் இரண்டாவது இடம் பெற்று, 8 பேர் பங்கேற்ற பைனலுக்கு முன்னேறினார். இதில் ஏமாற்றிய சாஜன், பந்தய துாரத்தை ஒரு நிமிடம், 58.05 வினாடி நேரத்தில் கடந்து, கடைசி இடம் (8) பிடித்தார். நியூசிலாந்தின் லெவிஸ் கிளேர்பர்ட் (1:55.05) முதலிடம் பிடித்து தங்கம் கைப்பற்றினார்.
* நேற்று 50 மீ., பட்டர்பிளை தகுதிச்சுற்றில் சாஜன் (24.94 வினாடி) கடைசி இடம் பெற்றார். ஒட்டுமொத்தமாக 28 வது இடம் பெற, அரையிறுதி வாய்ப்பை இழந்தார்.
விஷால் அசத்தல்
ஆண்களுக்கான 400 மீ., ஓட்டம் தகுதிச்சுற்று நடந்தது. ‘டாப்-16’ இடம் பிடித்தால் அரையிறுதிக்கு செல்லலாம். இந்தியா சார்பில் தமிழக வீரர்கள் விஷால், ராஜேஷ் ரமேஷ் பங்கேற்றனர்.
* தகுதிச்சுற்று 1ல் ராஜேஷ் ரமேஷ் (47.43 வினாடி) மூன்றாவது இடம் பெற்றார்.
* தகுதிச்சுற்று 6ல் களமிறங்கிய விஷால் (46.49 வினாடி) இரண்டாவது இடம் பெற்றார். ஒட்டுமொத்தமாக விஷால் 14வது இடம் பிடித்து, நாளை நடக்கும் அரையிறுதிக்கு முன்னேறினார். ராஜேஷ் ரமேஷ் 17வது இடம் பிடித்து, அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறினார்.
நிருபமா ஏமாற்றம்
பெண்களுக்கான 63 கிலோ பிரிவு பளுதுாக்குதலில் இந்தியா சார்பில் நிருபமா தேவி பங்கேற்றார். ‘ஸ்னாட்ச்’ பிரிவில் 93 கிலோ துாக்கினார். அடுத்து ‘கிளீன் அண்டு ஜெர்க்’ பிரிவில் 123 கிலோ துாக்க முயன்று தோல்வியடைந்தார்.
தேஜாஸ் அதிர்ச்சி
ஆண்களுக்கான 110 மீ., தடை ஓட்டம் நடந்தது. இந்தியாவின் தேஜாஸ் ஷிர்சே, தகுதிச்சுற்றில் மூன்றாவது இடம் (13.76 வினாடி) பெற்று, பைனலுக்கு முன்னேறினார். இதில் 15.39 வினாடி நேரத்தில் வர, கடைசி இடம் (8) தான் கிடைத்தது. ஜமைக்காவின் டெமாரியோ (13.17), இங்கிலாந்தின் பென்னெட் (13.30), சைப்ரசின் மிலன் (13.32) முதல் மூன்று பதக்கங்களை தட்டிச் சென்றனர்.
தேஜஸ்வின் விலகல்
ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் 2022 காமன்வெல்த்தில் வெண்கலம் வென்றவர் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் 27. இம்முறை முதல் முயற்சியில் 2.05 மீ., தாவ முயற்சித்து தோல்வியடைந்தார். இதன் முழங்காலில் ஏற்பட்ட வலியால் அவதிப்பட்டார். தவிர, நாளை துவங்கும் ஆண்களுக்கான ‘டெகாத்லான்’ போட்டியில் பங்கேற்க வேண்டும் என்ற நிலையில், உயரம் தாண்டுதலில் இருந்து விலகினார்.
