அப்போது அவர், “அண்மையில் நடைபெற்ற மாணவர் இளைஞர்களின் போராட்டத்தின் விளைவாக இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. நீட் தேர்வால் ஏற்பட்டிருக்கிற சிக்கலுக்கு, தேசிய அளவில் ஏற்பட்டிருக்கிற பாதிப்புகளுக்கு இந்த மசோதா தீர்வாகாது. நீட் தேர்வு முறையே முற்றிலும் கைவிட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன். சிஜேபி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், கட்சி சாராத மாணவர்கள், இளைஞர்கள் நீட் வினாத்தாள் கசிவினால் ஏற்பட்ட குளறுபடிகளை சீர் செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தாலும், அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலக கோறியிருந்தாலும், அந்த போராட்டத்தின் கருப்பொருள் பாஜக அரசு, மக்கள் விரோத அரசாக மாறியிருக்கிறது. ஊழல் முறைகேடுகள் நிறைந்த ஒரு அரசாக இயங்குகிறது என்பதன் வெளிப்பாடு என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் பாஜக வீழ்ச்சியை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்பதற்கான ஒரு தொடக்கப் புள்ளிதான் ஜந்தர் மந்தரில் நடைபெற்ற ஜென்சி தலைமுறையினரின் புரட்சியாகும். இது மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய போராட்டம் என்று மிக சாதாரணமாக பாஜக அரசு கருதியது. ஆனால் இது கட்டுப்பாடற்ற ஒரு மாபெரும் மக்கள் புரட்சியாக மாறியதன் விளைவாகத்தான் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் நெருக்கடி உருவாகி இருக்கிறது.
பாஜக அரசு பணிந்திருக்கிறது, சரணடைந்திருக்கிறது. மாணவர்கள் மீதும் இளைஞர்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்களை வன்முறை வெறியாட்டங்களை மிக வன்மையாக கண்டிக்கிறேன். அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும். அவர்களின் அடுத்த கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும், நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாடு அரசு நீட் கூடாது என்று சட்டம் இயற்றி குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிய நிலையில் அது நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே தமிழ்நாடு மாநிலம் எல்லாவற்றிலும் முன்னோடியாக இருப்பதைப் போல், இந்த நீட் தேர்வு முறையால் ஏற்படுகிற பாதிப்புகளை முன்னுணர்ந்து இந்த தேர்வு முறையை கைவிடப்பட வேண்டும் என்பதை தமிழ்நாட்டு மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். நீட் தேர்வு கூடாது. இதில் சீர்திருத்தம் என்பதில் எந்த பயனும் இல்லை. சட்டங்களை வலிமையாக்குவதால், தண்டனைகளை பெருக்குவதால் இந்த குற்றம் கட்டுப்படுத்தப்பட்டுவிடும், நிறுத்தப்படும் என்று எண்ணுவது மக்களை ஏமாற்றுவதாகும்.
ஆகவே தேசிய அளவில் ஒரே தேர்வை நடத்துவது என்பதும் அதற்கென்று தேசிய தேர்வு முகாமையை நிறுவி இருப்பதும் சாதாரண விளிம்புநிலை மக்களையும், மாநில அரசுகளையும் ஏக்கிற முயற்சி. ஆகவே இந்திய ஒன்றிய அரசுக்கு நான் விடுக்கிற வேண்டுகோள், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும். மாநில அரசுகளே தேர்வு முறைகளை வரையறுத்துக் கொள்ளவும், நுழைவு தேர்வை நடத்துவதற்கும் வழக்கம் போல் அனுமதிக்க வேண்டும்” எனப் பேசினார்.
