புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட காய் நகர்த்தி வரும் சூழலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸுக்கு ஆதரவு இல்லை என்று கூறிவிட்டது. இப்போது அந்தத் தொகுதியைக் குறிவைக்கு காங், இ.கம்யூனிஸ்ட் கட்சிகளில் யாருக்கு ஆதரவு என்பதில் தவெகவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6ம் தேதி நடக்கிறது. தேர்தலில் ஆளும் என்.ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் எம்எல்ஏ அசோக் ஆனந்த், திமுக சார்பில் சேது செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலச் செயலர் சலீம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தேர்தல் பணியை தொடங்கி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த பொதுத்தேர்தலில் தட்டாஞ்சாவடியில் தவெகவுடன் மாநில கட்சியான நேயம் மக்கள் கழகம் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
இதில் நேயம் மக்கள் கழகம் வேட்பாளர் விநாயகம் இரண்டாம் இடம் பிடித்தார். இதனால் மீண்டும் விநாயகம் போட்டியிட முடிவு செய்துள்ளார். ஆனால், காங்கிரஸ் கட்சியானது தங்கள் கட்சியில் விநாயகம் இணைந்து போட்டியிட வேண்டும் என வலியுறுத்தினார்கள். அதற்கும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது தங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தை சந்தித்து கடிதம் தந்துள்ளனர். மேலும் தாங்கள் போட்டியிடுவது உறுதி என தெரிவித்தனர்.
இச்சூழலில் காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் வைத்தியலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ அனந்த ராமன் ஆகியோர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடுவதைத் தவிர்த்து காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க வலியுறுத்தினர். ஆனால், அதற்கு இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதனிடையே இக்கட்சிகளில் தவெகவுக்கு யாரை ஆதரிப்பது என்பதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தவெக அரசுக்கு காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவளித்து அமைச்சரவையில் பங்கேற்றுள்ளனர். அதே நேரத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தருகின்றனர். இதனால் யாருக்கு ஆதரவு தருவது என தவெகவுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
