மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டம் பியோரா பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்திர சிங் சவுத்ரி. சமூக வலைதளங்களில் ‘பிட்டு தபாஹி’ என்ற பெயரில் அறியப்படும் இவர், பி.எஸ்.சி படித்து வருகிறார்.
ஆற்றை சுத்தம் செய்ய தொடங்கிய இளைஞர்
அஜ்னார் ஆற்றில் பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகள் உள்ளிட்ட கழிவுகள் அதிகளவில் தேங்கியிருந்ததைப் பார்த்த பிட்டு, கடந்த ஜனவரி 26-ம் தேதி முதல் ஆற்றை சுத்தம் செய்யத் தொடங்கினார். அதிகாரிகள் அல்லது ஏதேனும் அமைப்பின் உதவிக்காக காத்திருக்காமல், தனது சொந்த முயற்சியில் ஆற்றுக்குள் இறங்கி குப்பைகளை அகற்றினார். ஆரம்பத்தில் நண்பர்கள் சிலரும் அவருடன் இணைந்து பணியாற்றினர். பின்னர் அவர்கள் விலகிய நிலையில், பிட்டு தொடர்ந்து தனியாகவே இந்தப் பணியை மேற்கொண்டார்.
சொந்த பணத்தையும் செலவிட்டார்
ஆற்றை சுத்தம் செய்வதற்குத் தேவையான பொருட்கள் மற்றும் குப்பைத் தொட்டிகளை வாங்குவதற்காக சுமார் ரூ.30,000 வரை பிட்டு செலவு செய்ததாக கூறப்படுகிறது. அஜ்னார் ஆற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் குப்பைகள் மீண்டும் சேராமல் இருக்க குப்பைத் தொட்டிகளையும் அவர் நிறுவியுள்ளார்.
உடல்நலப் பிரச்னைகளையும் சந்தித்தார்
மாசடைந்த நீரில் தொடர்ந்து இறங்கி குப்பைகளை அகற்றியதால் பிட்டுவுக்கு உடல்நலப் பிரச்னைகளும் ஏற்பட்டுள்ளன. அவரது கை, கால்களில் தொற்று ஏற்பட்டதுடன், தோல் உரியும் பிரச்னையும் ஏற்பட்டதாக அவர் முன்பு தெரிவித்துள்ளார். இருப்பினும், இதற்காக தனது முயற்சியை அவர் கைவிடவில்லை. தொடர்ந்து ஆற்றில் இறங்கி குப்பைகளை அகற்றி வந்துள்ளார்.
“என்னை லூசு என்கிறார்கள்”
பிட்டுவின் முயற்சிக்கு சிலர் பாராட்டு தெரிவித்தாலும், சிலர் அவரை விமர்சித்துள்ளனர். சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்பதற்காகவே இந்தப் பணியைச் செய்வதாகவும் சிலர் குற்றம்சாட்டினர். இதற்கு பதிலளித்த பிட்டு, “என்னை கேலி செய்கிறார்கள், என்னை லூசு என்று அழைக்கிறார்கள். சிலர் தங்கள் வீட்டு சாக்கடையை சுத்தம் செய்யச் சொல்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார். மேலும், தான் வீடியோ எடுப்பதற்காக மட்டுமல்லாமல் உண்மையாகவே ஆற்றை சுத்தம் செய்திருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ஆனந்த் மகிந்திராவை தொடர்ந்து கெவின் பீட்டர்சன் பாராட்டு
பிட்டுவின் முயற்சி தொழிலதிபர் ஆனந்த் மகிந்திராவின் கவனத்தையும் ஏற்கெனவே ஈர்த்திருந்தது. அவர் சமூக வலைதளத்தில் பிட்டுவின் பணியை பாராட்டியிருந்தார். இதன் மூலம் பிட்டுவின் முயற்சி நாடு முழுவதும் கவனம் பெற்றது.
இந்த நிலையில், இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சனும்** பிட்டுவின் முயற்சியைப் பாராட்டியுள்ளார். பிட்டுவின் ஆற்றை சுத்தம் செய்யும் புகைப்படங்களைப் பகிர்ந்த பீட்டர்சன், “இந்தச் செய்தியை இன்று படித்தேன். இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். சிறப்பாக செய்துள்ளாய் தம்பி! இது வீரத்தனமான செயல். இவருக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்க வேண்டும்” என பாராட்டியுள்ளார்.
“மாற்றத்தை நாமே தொடங்க வேண்டும்”
பிட்டு தபாஹி என்ற பெயருக்கு ‘அழிவு’ என்ற பொருள் இருப்பதையும் சுட்டிக்காட்டிய பீட்டர்சன், பிட்டு தற்போது நீர் மாசுபாட்டை எதிர்த்து போராடி வருவதாக பாராட்டியுள்ளார். “சில நேரங்களில் மாற்றம் என்பது அடுத்தவர்களுக்காக காத்திருக்காமல் நாமே தொடங்குவதுதான்” என்றும் பீட்டர்சன் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு தனிநபரின் முயற்சியாக தொடங்கிய அஜ்னார் ஆற்றின் தூய்மைப் பணி தற்போது சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ள நிலையில், இந்தப் பணியை மேலும் பெரிய அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே பிட்டுவின் அடுத்த இலக்காக உள்ளது.
