நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிராக மும்பை தாதரில் உள்ள சிவாஜி பூங்காவில் நடந்த போராட்டத்தின் போது, காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட மாணவர்களை ஏற்றிச் சென்ற காவல் வாகனத்திற்கு முன்பாக நின்று வழிமறித்த மாடல் ரியா அதிர் (Rhiya Ahir) என்பவரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த சம்பவத்தின் மூலம் மாணவர் போராட்டத்தின் மிக முக்கியமான அடையாளங்களில் ஒருவராக அவர் மாறியுள்ளார்.
அரசாங்கத்தின் காவல்துறை நடவடிக்கைகளுக்கு எதிரான கோஷங்கள் சுற்றிலும் எதிரொலிக்க, மும்பையைச் சேர்ந்த இந்தப்பெண், பெய்யும் மழையில் ஹூடி மற்றும் தொப்பி அணிந்தபடி, தனியாளாகத் தனது ஒரு கையை நீட்டி காவல் வாகனத்தின் பாதையை தைரியமாக மறித்து நிற்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. சிறிது நேரத்தில் அவருக்குப் பின்னால் சிறிது தூரத்தில் திரண்ட கூட்டத்தினருடன் இணைந்து, “ஜப் ஜப் மோடி டர்தா ஹை, போலீஸ் கோ ஆகே கர்தா ஹை” (மோடி பயப்படும்போதெல்லாம் காவல்துறையை முன்னிறுத்துகிறார்) என ரியா அதிரும் உரக்க முழக்கமிட்டார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
கடந்த ஜூலை 20 அன்று டெல்லியில் பாராளுமன்ற முற்றுகைப் போராட்டத்தை நடத்திய ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (Cockroach Janata Party – CJP), இதன் நிறுவனர் அபிஜித் தீப்கே இந்தியா திரும்பியதில் இருந்தே பல்வேறு போராட்டங்களை ஒருங்கிணைத்து வருகிறது. ரியா அதிர் காவல் வாகனத்தை மறிக்கும் வீடியோவை தனது X தளத்தில் பகிர்ந்த சி.ஜே.பி, ‘தங்கல்’ திரைப்படத்தின் பிரபல வசனமான “நமது பெண்கள் ஆண்களுக்கு எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் அல்ல” என்ற வரிகளுடன் பதிவிட்டுள்ளது.
டெல்லி ஜந்தர் மந்தரில் சி.ஜே.பி நடத்திய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் மும்பையின் தாதர் சிவாஜி பூங்கா, செம்பூர், ஜூஹூ மற்றும் போவாய் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மற்றொரு சம்பவத்தில், கைது செய்யப்பட்ட போராளிகளை ஏற்றிச் சென்ற காவல் வாகனம் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த போது, அவ்வழியாகச் சென்ற நபர் ஒருவர் வாகனத்தின் பின் கதவைத் திறந்து விட்டதால், உள்ளிருந்த போராளிகள் வெளியேறித் தப்பிச் சென்ற நிகழ்வும் நடந்துள்ளது. இதற்கிடையே, கைது செய்யப்பட்ட போராளிகளுக்கு மும்பைக் காவலர் ஒருவர் பொய் வழக்கு போடுவதாக மிரட்டல் விடுக்கும் மற்றொரு வீடியோவும் வைரலாகி வருகிறது.
हमारी छोरिया छोरो से कम नहीं,
मुंबई में लड़कियां भविष्य सुरक्षित करने के लिए संघर्ष करती हुई।#मुंबईpic.twitter.com/91fugfBFM3
— Cockroach Janta Party (@CJP_for_India) July 23, 2026
அந்த வீடியோவில் பேசும் காவலர், மீண்டும் உங்களை இந்தப் பக்கம் பார்த்தேன் என்றால், என்னை விட மோசமான ஆள் வேறு யாரும் இருக்க முடியாது. நேரடியாக உங்க பாக்கெட்டில் 50-50 கிராம் (போதை) பவுடரைப் போட்டு விடுவேன். அப்புறம் வாழ்க்கையே போய்விடும், ஜாமீனும் கிடைக்காது. உங்களால் எங்களுக்குத்தான் தேவையில்லாத கஷ்டம் என்று மிரட்டும் தொனியில் பேசுவது பதிவாகியுள்ளது.
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராகப் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக, சிவ சேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா (MNS) தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோர் இணைந்து ஜூலை 26 அன்று மும்பையில் கூட்டுப் பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
