தன்பாலின ஈர்ப்பால் வந்த சிக்கல்; சிறுவர்கள் நடத்திய பயங்கரம்!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன். கூலித் தொழிலாளியான இவர் கடந்த 6-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மாயமானார். அவரை உறவினர் மற்றும் நண்பர்கள் வீடு உள்ளிட்ட பல இடங்களில் மனைவி புவனேஸ்வரி தேடிய போது எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அவரையும் காணவில்லை. உடனே இது குறித்து புவனேஸ்வரி சேர்ந்தமரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச்சென்றிருக்கிறார். அது சமயம் மகேந்திரனின் நண்பர்கள் சிலர் புவனேஸ்வரிக்குப் போன் செய்து உங்களது கணவருடன் நாங்கள் அனைவரும் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளோம். சீக்கிரம் வந்து விடுவோம். அதனால எங்களைத் தேடவேண்டாம் என்று கூறி இருக்கிறார்கள் இதனை நம்பிய புவனேஸ்வரி புகார் கொடுக்காமலேயே வீடு திரும்பியிருக்கிறாராம்.

ஆனால் 10 தினங்கள் ஆகியும் மகேந்திரன் வராமல் போனதாலும் கைபேசியில் தொடர்பு கொள்ளாத காரணத்தாலும் சந்தேகம் அடைந்த மனைவி புவனேஸ்வரி சேர்ந்தமரம் காவல் நிலையத்தில் கடந்த 14ம் தேதி புகார் அளித்திருக்கிறார். அதன் அடிப்படையில் வாலிபர் மாயம் என வழக்குப் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் அருள் சாம்ராஜ் மற்றும் போலீசார் மகேந்திரனை தேடி இருக்கிறார்கள். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் மகேந்திரனின் மொபட் மேலகடையநல்லூர் – காசிதர்மம் செல்லும் சாலையில் குளத்துக்கரை அருகே கிடந்ததை கண்டெடுத்த போலீசார் தீவிர விசாரணையை நடத்திருக்கிறார்கள். அத்துடன் புவனேஸ்வரிக்கு போன் செய்து தேட வேண்டாம் எனக் கூறியவரை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.அப்போதுதான் பதறவைக்கும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

அதாவது மேலகடையநல்லூரைச் சேர்ந்த மூன்று சிறார்கள் உட்பட 4 பேர் மகேந்திரனை கொலை செய்ததுடன் அவரது உடலை கடையநல்லூர் புதிய பஸ் நிலையம் மதுரை – தென்காசி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள ஒரு மடத்துக்குச் சொந்தமான பராமரிப்பு இல்லாத பாழடைந்த முள்செடிகள் நிறைந்த பகுதியில் உள்ள சிறிய கிணற்றில் போட்டதும் தெரியவந்தது. இதை அடுத்து புளியங்குடி டி.எஸ்.பி. நமச்சிவாயம் சேர்ந்தமரம் இன்ஸ்பெக்டர் அருள் சாம்ராஜ் கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி. ஆகியோர் அடங்கிய போலீசார் சம்பவ இடத்திற்கு மூன்று சிறார்களையும் அழைத்துச் சென்றனர். அப்போது அவர்கள் மகேந்திரனின் உடல் கிடக்கும் கிணற்றை அடையாளம் காட்டிருக்கிறார்கள். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் மகேந்திரனின் உடலை மீட்டபோது கத்திக் குத்து காயத்துடன் கிடந்த உடலில் தலை இல்லாதது தெரியவந்தது தொடர்ந்து போலீசார் சிறார்களிடம் அழுத்தமாக விசாரணை நடத்தியதில் தலையை குற்றாலம் கலைவாணர் கலையரங்கம் பின்புறமுள்ள வாட்டர் டாங்க் பகுதியில் புதைத்ததாகத் தெரிவித்திருக்கிறார்கள். அதையடுத்து அங்கு சென்ற போலீசார் வருவாய்துறை அதிகாரிகள் முன்னிலையில் அங்கு தோண்டி தலையை மீட்டிருக்கிறார்கள். இதையடுத்து உடலை பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இந்தக் கொலைச் சம்பவம் பரபரப்பான மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நடைபெற்றதால் அங்கு பரபரப்பு பற்றியிருக்கிறது.

மேலும் சிறார்களிடம் போலீசார் விசாரித்ததில், பெண் போல சுபாவம் கொண்ட தோற்றத்தைக் கொண்டிருக்கும் மகேந்திரனுக்கு மேலக்கடையநல்லூரைச் சேர்ந்த சிறுவன் ஒருவனுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் நெருக்கமாகவே இருந்திருக்கிறார்கள். சில பல வேளைகளில் மகேந்திரன் அந்தச் சிறுவனுடன் தன் பாலின ஈர்ப்பில் உறவில் ஈடுபடுவது வழக்கமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கொண்டு அன்றைய தினம் மகேந்திரன் மது அருந்த அந்த சிறுவனை அழைத்து வந்துள்ளார். இருவரும் மது அருந்திய நிலையில் சிறுவனிடம் மகேந்திரன் உறவில் ஈடுபட வற்புறுத்தியதாகத் தெரிகிறது. ஆனால் அந்த சிறுவனுக்கு அன்றைய தினம் அதற்கு விருப்பம் இல்லாததால் மகேந்திரனின் தொந்தரவு தாங்க மாட்டாமல் அந்த சிறுவன் மற்றொரு சிறுவனை செல்போனில் அழைத்து வரச்சொல்லியிருக்கிறான். பிறகு இரண்டு சிறுவர்களும் சேர்ந்து மகேந்திரனிடம் சண்டை போட்ட போது மகேந்திரன் இருவரையும் கடுமையாகத் தாக்கியுள்ளாராம். இதையடுத்து அந்த சிறுவர்கள் மேலும் ஒரு சிறுவனுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அந்த சிறுவனோ 23 வயது மதிக்கத்தக்க ஒரு நபரையும் உடன் அழைத்து வந்திருக்கிறார். இவர்கள் நான்கு பேரும் சேர்ந்து மகேந்திரனை தாக்கியுள்ளனர்.

இதில் மகேந்திரன் மூச்சு பேச்சு இல்லாத நிலையில் கீழே சரிந்திருக்கிறார். அவர் இறந்து விட்டார் என்று நினைத்து கடைக்குச் சென்று புதைப்பதற்கான பொருட்களை வாங்கி வந்து அதனைக் கொண்டு உடலை அருகிலுள்ள அடர்ந்த காட்டுப் பகுதியின் கிணற்றில் தள்ளியிருக்கிறார்கள். உடல் அருகே துண்டிக்கப்பட்ட தலையைப் போட்டால் விஷயம் உடனே வெளியே தெரிந்து விடும். தாங்கள் மாட்டிக்கொள்ளாமல் இருக்க தீவிர யோசனை செய்து, தலையை ஒரு பேக்கில் வைத்து தொலைவான இடத்தில் புதைத்துவைத்தால் தாங்கள் சிக்க முடியாது என்ற எண்ணத்தில் அந்தத் தலையை பேக்கில் வைத்து 30 கி.மீ தொலைவில் உள்ள குற்றாலம் கலைவானர் கலையரங்கம் அருகே புதைத்திருக்கிறார்கள். பின்னர் இரவு அங்கேயே தங்கிவிட்டு மறுநாள் ஊர் திரும்பியிருக்கிறார்கள்.

மகேந்திரனை கொலை செய்த சிறார்கள் உட்பட 4 பேரும் கொலை சம்பவத்தை மறைப்பதற்காக உடலையும் தலையையும் தனித் தனி இடங்களில் போட்டுவிட்டு எதுவுமே தெரியாதது போன்று வழக்கம்போல் ஊர் சுற்றி வந்திருக்கிறார்கள். மேலும் உடலை வீசிய அந்த கிணற்றில் மகேந்திரனின் முண்டம் கிடக்கிறதா அல்லது போலீஸ் வந்து எடுத்துச் சென்றுவிட்டார்களா என்று தெரிந்துகொள்ள தினமும் அந்த சிறார்கள் சம்பவ இடத்திற்கு சென்று வந்திருக்கிறார்களாம்.

இந்தக் கொலைச் சம்பவத்தில் எந்த வித க்ளுவும் கிடைக்காமல் போகவே மகேந்திரனின் மனைவிக்கு போன் செய்த அந்த சிறுவனின் நம்பரைக் கொண்டு ட்ரேஸ் செய்ததில் அவன் சிக்கிய போது விசாரித்தபோதுதான் இந்த படு பயங்கரமான கொலை சம்பவம் வெளியே தெரிய வந்துள்ளது என்கிறார்கள் இந்தச் சம்பவத்தின் தனிப்படை போலீசார்.

இது போன்ற கொடூரக் கொலைச் செயலை தேர்ந்த குற்றவாளிகளே செய்ய தயங்குகிற வேளையில் முதிர்ச்சி அடையாத இளம் சிறார்கள் இப்படிப்பட்ட தலையை வெட்டி எடுக்கும் கொடூரக் கொலையை செய்திருப்பது பதைபதைக்க வைக்கிறது. இதுபோன்ற சம்பவங்களால் இளம் கிரிமினல்கள் வளர்வது சமூகத்தின் அமைதிக்கே சவாலானதாகும்.

Source link