தமிழகத்தில் மதத்தை வைத்து அரசியல் செய்ய முடியாது; அமைச்சர் ரமேஷ் திட்டவட்டம்

சென்னை: திருச்சியில் ஹிந்து அறநிலை துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அவர் கூறியதாவது: எல்லா கோவில்களிலும் உன்னிப்பாக கவனிக்க சொல்லி இருக்கிறோம். ஏதாவது கோவிலில் அனுமதிக்க கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூல் செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எந்த புகார் வந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது.

மீடியாக்கள், மக்கள் இது போல் விஷயம் நடந்தால் எனது கவனத்திற்கு கொண்டு வரலாம். கொண்டு வந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். திருவண்ணாமலை கோவிலுக்கு அமைச்சரின் உதவியாளர் எல்லா விண்ணப்பங்களிலும் கையெழுத்திட்ட பிறகு தான் கோவிலுக்குள் வந்திருக்கிறார். மதத்தை வைத்து அரசியல் செய்யும் அவசியம் தமிழகத்தில் கிடையாது.

எல்லா மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எம்மதமும் நம்மதம் என்று நினைக்கக் கூடியவர் முதல்வர் விஜய். அனைத்து கோவில்கள் மசூதி, சர்ச்களுக்கு செல்கிறார். ஒரு சில தமிழகத்தில் மத அரசியல் செய்ய விரும்புகின்றனர்.

அவர்களுக்கு மத அரசியலைத் தவிர வேறு எந்த அரசியலும் தெரியாது. அவர்கள் பல வருடங்களாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தின் மண் மதசார்பற்ற சமூக நீதிக்கான மண். மக்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். இவ்வாறு அமைச்சர் ரமேஷ் கூறினார்.

ஸ்டாலின் போட்டியா?

திருச்சி கிழக்கில் ஸ்டாலின் போட்டியிட உள்ளதாக தகவல் பரவுகிறது என நிருபர் எழுப்பிய கேள்விக்கு, ‘அறிவிப்பு வரட்டும் பார்த்துக் கொள்ளலாம்’ என அமைச்சர் ரமேஷ் பதில் அளித்துள்ளார்.

Source link