தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் 10 புதிய ரயில் பாதை திட்டங்களுக்காக 2025-26 நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட 617.76 கோடி ரூபாயில், வெறும் ரூ.192.54 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் தெரியவந்துள்ளது. இது மொத்த ஒதுக்கீட்டில் வெறும் 31% மட்டுமே ஆகும். இதனைத் தொடர்ந்து, நடப்பு 2026-27 நிதியாண்டிற்கான இந்த திட்டங்களின் நிதி ஒதுக்கீடும் ரூ.497.57 கோடி ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் செலவிடப்பட்ட நிதியில் பெரும்பகுதி திண்டிவனம்–நகரி திட்டத்திற்கே ஒதுக்கப்பட்டது; இதில் மட்டும் ரூ.169.28 கோடி செலவிடப்பட்டுள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு ரூ.3,631.34 கோடி மதிப்பீட்டில் அனுமதிக்கப்பட்ட இந்த 184.45 கி.மீ நீளத் திட்டம், இதுவரை வெறும் 16% பணிகளை மட்டுமே எட்டியுள்ளது. இதற்கு நேர்மாறாக, பிற முக்கிய திட்டங்களுக்கு மிகக் குறைந்த அளவே செலவிடப்பட்டுள்ளது: அருப்புக்கோட்டை வழியான மதுரை–தூத்துக்குடி திட்டத்திற்கு வெறும் ரூ.12.19 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. மொரப்பூர்–தருமபுரி திட்டத்திற்கு 10.72 கோடி ரூபாயும், ராமேஸ்வரம்–தனுஷ்கோடி திட்டத்திற்கு மிக அற்பமாக 0.35 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, திண்டிவனம்–திருவண்ணாமலை, மாமல்லபுரம் வழியான சென்னை–கடலூர், அத்திப்பட்டு–புத்தூர் மற்றும் ஈரோடு–பழனி ஆகிய 4 முக்கிய திட்டங்களுக்கு 2025-26 நிதியாண்டில் 187.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், ஒரு பைசாகூட செலவிடப்படாமல் ‘பூஜ்ஜியம்’ என்ற அளவிலேயே பதிவாகியுள்ளது. நிதி ஒதுக்கீடும் அதைச் செலவழிக்கும் வேகமும் இவ்வளவு குறைவாக இருந்தால், நிலம் கையகப்படுத்தும் பணிகளைக் கூட தொடங்க முடியாது. திட்டங்களை விரைந்து முடிப்பதில் தெற்கு ரயில்வேக்கு துளியும் அக்கறை இல்லை என்பதையே இது காட்டுகிறது என்று இந்த ஆர்டிஐ தகவல்களைப் பெற்ற தயானந்த் கிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
நீண்டகால முடக்கத்திற்குப் பிறகு மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்ட திட்டங்களான திண்டிவனம்–செஞ்சி–திருவண்ணாமலை, அத்திப்பட்டு–புத்தூர் மற்றும் சென்னை–மாமல்லபுரம்–கடலூர் ஆகிய திட்டங்களுக்கு நடப்பு 2026-27 நிதியாண்டில் தலா 1 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஈரோடு–பழனி திட்டத்திற்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை (ரூ. 0). கடந்த ஆண்டில் அதிக நிதியை விழுங்கிய திண்டிவனம்–நகரி திட்டத்திற்குக்கூட, கடந்த ஆண்டின் ஒதுக்கீடான 347.7 கோடி ரூபாயிலிருந்து தற்போது 334.7 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் செயல்படுத்தப்படவுள்ள இந்த 10 புதிய திட்டங்களும் மொத்தம் 870.78 கி.மீ தூரத்தைக் கொண்டவை; இவற்றின் ஒட்டுமொத்த திட்ட மதிப்பீடு 16,841.34 கோடி ரூபாய் ஆகும். ஆனால், 2026-27 நிதியாண்டிற்கு வெறும் 497.57 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இது மொத்த திட்ட மதிப்பீட்டில் வெறும் 2.95% மட்டுமே. நடப்பு ஆண்டின் ஒட்டுமொத்த நிதியும் பெரும்பாலும் இரண்டே திட்டங்களுக்கு மட்டுமே பிரித்து அளிக்கப்பட்டுள்ளது.
திண்டிவனம்–நகரி திட்டம் (ரூ. 334.7 கோடி), ஸ்ரீபெரும்புதூர்–கூடுவாஞ்சேரி முதல் கட்டத் திட்டம் (ரூ. 100 கோடி). இதில் ஸ்ரீபெரும்புதூர் திட்டம் என்பது சென்னை புறநகர் தொழிற்பேட்டைப் பகுதியிலிருந்து சென்னை துறைமுகத்திற்கு சரக்கு போக்குவரத்தை இணைப்பதற்காக 3,136 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் 60 கி.மீ நீளத் திட்டமாகும்.
புதிய ரயில் பாதைகள் மட்டுமின்றி, இரட்டை ரயில் பாதை மற்றும் பலவழிப் பாதை அமைக்கும் திட்டங்களிலும் இந்த நிதிப் பற்றாக்குறை எதிரொலித்துள்ளது. காட்பாடி–விழுப்புரம் திட்டத்திற்கு 2025-26-ல் 200.45 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு 1/100 பங்கிற்கும் குறைவாக வெறும் 2 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. சேலம்–கரூர்–திண்டுக்கல், ஈரோடு–கரூர் வழித்தடங்களுக்கான நிதி ஒதுக்கீடு தலா 100 கோடி ரூபாயிலிருந்து வெறும் 5 கோடி ரூபாயாகச் சரிந்துள்ளது. மொத்தம் 8,173.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 658 கி.மீ தூரத்தைக் கொண்ட 14 இரட்டை ரயில் பாதை மற்றும் வழித்தட விரிவாக்கத் திட்டங்களுக்கு, 2026-27 நிதியாண்டில் வெறும் 342.10 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
