தூத்துக்குடி மாவட்டம் அமுதா நகர்ப் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் என்ற 26 வயது இளைஞர், காவல் நிலைய விசாரணையின் போது மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது தூத்துக்குடியில் அரசு மதுபான கடை பாரில் ஊழியராக பணியாற்றி வந்த அருணாச்சலம், கடந்த 17ஆம் தேதி மதுபான கடை மூடிய பின்பு, சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாகக் கூறி தென்பாகம் காவல்துறையினர், அவரை கைது செய்தனர்.
அதோடு அவரிடம் இருந்து 120 முதல் பாட்டில்கள் பறிமுதல் செய்து, காவல்துறையினர் விசாரணைக்காக தென்பாகம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சூழலில் கடந்த 17ஆம் தேதி மாலை அருணாச்சலம் உடலில், தலை மற்றும் கால் ஆகியவற்றில் பலத்த காயங்களுடன் தென்பாகம் காவல்துறையினர் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதைத் தொடர்ந்து, அவரது தாய் பரமேஸ்வரியிடம் அவரது மகனை அரசு மருத்துவமனையில் சேர்த்ததாகத் தகவல் தெரிவித்தனர்.
இந்த சூழ்நிலையில், இன்று (23.07.2026) காலை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அருணாச்சலம் பரிதாபமாக உயிரிழந்தார். காவல்துறையினர் அடித்ததால் தான் அருணாச்சலத்திற்கு தலை மற்றும் காயம் ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். மேலும், இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கு வேண்டும் எனவும் கூறி அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் போராட்டத்தில் ஈடுபட்ட அருணாச்சலத்தின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இந்த சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த வேண்டும், சிறப்பு மருத்துவர்கள் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும், அதனை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்தார்கள். இந்த கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகம் ஏற்றுக்கொண்டது. அதன் அடிப்படையில் தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி விஜயராஜ், அருணாச்சலத்தின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருக்கும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்து அவருடைய குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார். அதனை தொடர்ந்து குளிரூட்டப்பட்ட அறையில் உள்ள அருணாச்சலத்தின் உடலில் ஏற்பட்டுள்ள காயங்களை பார்த்து விசாரணை நடத்தி வருகின்றார்.
