டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் முறைகேடு, வினாத்தாள் கசிவுக்கு எதிராக அமைதி வழியில் போராடிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இளைஞர்கள் மீதும் மாணவர்கள் மீதும் காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியது. இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் திரை பிரபலங்களும் இளைஞர்களுக்கு ஆதரவாகவும் வன்முறைக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் சென்னை எழும்பூரில் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர், லெனின் பாரதி, மன்சூர் அலிகான், நடிகர் கலையரசன், பாடகர் அறிவு, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினர் கலந்து கொண்டனர். மேலும் நீட் தேர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இவர்களோடு நடிகை ஆண்ட்ரியாவும் கலந்து கொண்டார்.
நிகழ்வில் வெற்றிமாறன் பேசுகையில், “ஒரு நாட்டில் இளைஞர்கள் போராட்டத்துக்கு வருகிறார்கள் என்றால் அந்த நாட்டில் மற்ற அமைப்புகள் சரியாக செயல்படவில்லை என்று அர்த்தம். காக்ரோச் ஜனதா பார்ட்டியின் போராட்டம் அரசினுடைய தோல்வி. அவர்களுடைய போராட்டம் நீட் தேர்வில் நடந்த குளறுபடிகளை சரி செய்வதை தாண்டி நீட் தேர்வை தடை செய்ய வேண்டும் என்ற போராட்டமாக மாற வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை நாம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.
இங்கே நீட் தேர்வின் மூலமாக நம்முடைய மருத்துவ மற்றும் கல்வியை அறிவை முழுமையாக நம்மிடமிருந்து எடுக்கக்கூடிய வேலையாக நடக்கிறது. மீண்டும் அவர்களிடம் நாம் கைகட்டி நிற்க வேண்டும் என்ற நிலைக்கு போகக்கூடியாக முயற்சியாகத்தான் இருக்கிறது. அதனால் நீட் எதிர்ப்புக்கு நாம் தொடர்ந்து செயல்பட வேண்டும். எப்போதும் போல் இல்லாமல் இந்த முறை தீவிரமாக செயல்பட வேண்டும். அதனால் நீலம் மாணவர் அமைப்பு சார்பாக எப்போது ஆர்ப்பாட்டம் நடைபெற்றாலும் அதில் நான் கண்டிப்பாக கலந்து கொள்வேன். நீட்டை தடை செய்ய நாம் ஒன்றிணைவோம்” என்றார்.
