தமிழக அரசின் அதிகரித்து வரும் கடன் செலவுகள் கவலைக்குரிய விஷயம்: முதன்மை கணக்காயர்

சென்னை: ”கடனை திருப்பி செலுத்தும் திறன் அடிப்படையில், மாநிலம் தற்போது நிலையாக இருந்தாலும், அதிகரித்து வரும் கடன் சேவை செலவுகள் கவலைக்குரிய விஷயம்,” என, மத்திய கணக்கு தணிக்கை துறையின் முதன்மை கணக்காயர் திருப்பதி வெங்கடசாமி தெரிவித்தார்.

அவரது பேட்டி: ஏழு தணிக்கை அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றான, 2024 – 2025 மாநில நிதிநிலை குறித்த இந்திய தணிக்கை தலைவரின் தணிக்கை அறிக்கை, சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

பூர்த்தி செய்யவில்லை

வருவாய் பற்றாக்குறை, 2023 – 24ல், 45,121 கோடி ரூபாயில் இருந்து, 2024 – 25ல், 45,840 கோடி ரூபாயாக உயர்ந்தது. மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி அதிகரித்த போதிலும், வருவாய் உபரியை அடைவது குறித்த, 15வது நிதி ஆணையத்தின் கணிப்பை, மாநில அரசு பூர்த்தி செய்யவில்லை.

நிதி பற்றாக்குறை, 1.01 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது, தமிழக மாநில நிதி பொறுப்புடமை சட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட, 3 சதவீத உச்சவரம்பை விட சற்று அதிகம். வருவாய் செலவினத்தில் மானியங்கள், 16 சதவீத பங்கை கொண்டிருந்தன. முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது, 39.35 சதவீதம் அதாவது, 14,854 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதற்கு முக்கிய காரணங்களாக, மகளிர் உரிமை தொகை திட்டம், விவசாய மின் பயன்பாடு தொடர்பாக, மின் வாரியத்திற்கு வழங்கப்பட்ட மானியமாகும்.

7.78 சதவீதம் வட்டி

கடந்த, 2025 மார்ச் நிலவரப்படி, பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்களில் அரசின் முதலீடு, 61,735 கோடி ரூபாயாக இருந்தது. இதிலிருந்து கிடைத்த வருவாய் விகிதம், 0.83 சதவீதமாக மட்டுமே இருந்த நிலையில், மாநில அரசு தான் வாங்கிய கடன்களுக்காக, 7.78 சதவீதம் வட்டி செலுத்தியது.

அந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட, 42,393 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய முதலீடுகளில், 38,664 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டிருந்ததை, தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதில் மின் வாரியம், ஏழு போக்குவரத்து கழகங் கள் அடங்கும்.

கடன் சேவைக்கான செலவை சமாளிக்கும் திறனை அளவிடும், வருவாய் வரவுகளில் வட்டி செலுத்துதல்களின் விகிதம், 2023 – 24ல், 20.24 சதவீதமாக இருந்த நிலையில், 2024 – 25ல், 21.18 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடன் திருப்பி செலுத்தும் திறன் அடிப்படையில், மாநிலம் தற்போது நிலையாக இருந்தாலும், அதிகரித்து வரும் கடன் சேவை செலவுகள் கவலைக்குரிய விஷயமாகும்.

உற்பத்தித் திறன் உடைய மூலதன செலவுகளுக்கு நிதி வழங்குவதற்கு பதில், புதிய கடன்களில் பெரும் பகுதி பழைய கடன்களை தீர்த்து, புதிய கடன்களை பெறும் சுழற்சிக்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய போக்கு, புதிய வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தும் மாநிலத்தின் திறனை கட்டுப்படுத்துவதுடன், உற்பத்தித் திறன் உடைய முதலீடுகளுக்கு ஆதரவளிப்பதற்கு பதில், கடன் சேவை சுழற்சிக்குள் சிக்கிக்கொள்ளும் அபாயத்தையும் அதிகரிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Source link