முதல்வரின் தனிச் செயலாளராக இருக்கும் லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ்-க்கு கூடுதல் பொறுப்பாக முதல்வரின் முகவரி துறையின் சிறப்பு அதிகாரி பொறுப்பையும் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ், முதல்வர் விஜய்யின் 2வது தனிச் செயலராக நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், அவருக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு தீர்வு காணும் முதல்வரின் முகவரி துறையை முதல்வர் அலுவலகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. முதல்வரின் முகவரி துறை மூலம் மக்கள் அளிக்கும் மனுக்கள் நேரடியாக முதல்வரின் பார்வைக்கு செல்லும். இதுவரை வேறு துறையில் இருக்கும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி முதல்வரின் முகவரி துறையும் கூடுதலாக கவனித்து வந்தார். இப்போது முதல்வரின் அலுவலகத்திலேயே செயலாளராக இருக்கும் லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ்-க்கு முழு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் மனுக்கள் மீதான நடவடிக்கை மிக வேகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ்-க்கு இந்த துறை முழு கூடுதல் பொறுப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த துறையின் சிறப்பு அதிகாரியாக அனைத்து அதிகாரங்களும், கையெழுத்திடும் அதிகாரமும், முடிவெடுக்கும் அதிகாரமும் லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ்-க்கு முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக அமுதா ஐ.ஏ.எஸ் கவனித்து வந்த இந்தப் பொறுப்பை, மறு உத்தரவு வரும் வரை லட்சுமி பிரியா வகிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சுமி பிரியா, தமிழ்நாடு கேடரைச் சேர்ந்த 2006 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரி. திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஒன்றியத்தை சேர்ந்தவர். மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ பட்டம் பெற்ற லட்சுமி பிரியா, 28 வயதாக இருக்கும் போதே ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று அதிகாரியானார். பல்வேறு பதவிகளில் சிறப்பாக பணியாற்றிய லட்சுமி பிரியா, கடந்த 2023 ஆம் ஆண்டு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் த.வெ.க அரசு அமைந்த பிறகு கடந்த மே மாதம் முதல்வரின் தனிச் செயலாளராக லட்சுமி பிரியா நியமனம் செய்யப்பட்டார்.
லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ் முதல்வரின் செயலாளராக, முதல்வரின் தினசரி நிகழ்வுகள், கோப்புகளை கவனித்து வருபவர். மிகவும் திறமையான, நேர்மையான அதிகாரி என பெயர் எடுத்தவர். அவர் தற்போது முதல்வரின் முகவரித் துறையும் கவனிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
