புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் தொடர்ந்து வெள்ளாற்றில் இருந்து மணல் கடத்தல், பக்கத்துக் கிராமங்களில் இருந்து கிராவல் கடத்தல்கள் பட்டப்பகலிலும் நடப்பது மாமூலாக உள்ளது. எப்போதாவது கனிம கடத்தல் வாகனங்கள் பிடிபடும் போது கனிம கொள்ளையில் ஈடுபடுவோரே பேச்சுவார்த்தை மூலம் வாகனங்களை மீட்டுச் செல்வதும் வழக்கம். சில நேரங்களில் சில வழக்குகளும் பதிவாகி உள்ளது.
இந்த நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோயில் பகுதியில் தமிழ்நாடு அரசு, அறந்தாங்கி நகராட்சி என்று எழுதப்பட்ட டிப்பர் லாரி ஒன்று அதிக பாரத்துடன் செல்வதைப் பார்த்த அறந்தாங்கி டி.எஸ்.பி தனிப்படை போலிசார் அந்த வாகனத்தை நிறுத்திய போது லாரி ஓட்டுநர் இறங்கி ஓடிவிட்டதால் லாரியை சோதனை செய்த போது டிப்பர் லாரியில் ஆற்று மணல் இருந்தது. இதனையடுத்து அரசு வாகனத்தைத் தனிப்படை போலிசார் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
போலிசார் அறந்தாங்கி நகராட்சி குப்பை வாகனம் என்று இருந்ததால் நகராட்சி அலுவலகத்தில் விசாரித்த போது சில மாதங்களுக்கு முன்பு கண்டமான லாரி என்று ஏலம் விடப்பட்டது என்று கூறியுள்ளனர். இதனையடுத்து நடந்த விசாரனையில் புதுக்கோட்டை சாலையில் உள்ள அய்யாத்துரை மகன் ராஜ்குமார்(44) (திமுக பிரமுகர்) என்பவரிடம் இந்த லாரி உள்ளது. நகராட்சியில் இருந்து லாரியை வாங்கிய பிறகு பெயரை மாற்றாமல் தமிழ்நாடு அரசு, அறந்தாங்கி நகராட்சி என்ற பழைய எழுத்துகளை அழிக்காமலேயே மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இது நகராட்சி நிர்வாகத்திற்குத் தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.
லாரியை பறிமுதல் செய்த போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அமைச்சர் முகமது பர்வேஸ் தொகுதியில் தமிழ்நாடு அரசு என்ற பெயருடன் லாரியில் மணல் கடத்தல் செய்திருப்பதை சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.
