தமிழ்நாட்டில் 7 தொகுதிகள் காலி: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிப்பு

தமிழகத்தில் 7 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் தேதியை அறிவித்துள்ளது, 

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உயர்ந்த நிலையில், ஆட்சி அமைக்க 119 இடங்கள் தேவை என்பதால், காங்கிரஸ், வி.சி.க, முஸ்லீம் லீக், கம்யூனிஸ் கட்சிகள் ஆதரவுடன் த.வெ.க ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், இந்த ஆட்சி தற்போது 4 மாதங்களை கடந்துள்ளது. 

இந்நிலையில், தமிழகத்தில் த.வெ.க ஆட்சி அமைந்தவுடன், அ.தி.மு.க.வில் இருந்து 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.க.வில் இணைந்தது. ஏற்கனவே திருச்சி கிழக்கில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய் தனது பதவியை ராஜினாமா செய்ததால், அந்த தொகுதியும் சேர்த்து தமிழகத்தில் 7 தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த நீதிமன்றம் தற்காலிக தடை விதித்திருந்த நிலையில், தற்போது 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது, 

அ.தி.மு.க உறுப்பினர் மரகதம் குமாரவேல் ராஜினாமா செய்த மதுராந்தகம், அ.தி.மு.க. உறுப்பினர் சத்யபாமா ராஜினாமா செய்த தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தாராபுரம் தொகுதியில் தி.மு.க 2-வது இடமும், த.வெ.க 3-வது இடமும் பெற்றிருந்த நிலையில், மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க 2-வது இடம் பிடித்திருந்தனர். இதனிடையே தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுக்கும், வரும் அக்டோபர் 6-ந் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், செப்டம்பர் 9-ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 16-ம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவடைய உள்ளது. தொடர்ந்து செப்டம்பர் 17-ம் தேதி வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், செப்டம்பர் 19-ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அக்டோபர் 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link