தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2026-28 ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
பி யுவராஜ் தலைவராகவும், என். விஜய முரளி செயலாளராகவும், வீ. கே. சுந்தர் பொருளாளராகவும், எஸ். புவனேந்திரன் மற்றும் எஸ். சதீஷ்குமார் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், பாலன் என்கிற ஜி. பாலசுப்பிரமணியன் மற்றும் ஆர். உதயகுமார் ஆகியோர் இணை செயலாளராகவும் பதவி ஏற்று கொண்டனர்.
இந்த நிகழ்வில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் – தமிழ் திரைப்படத்தின் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் – தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம்- தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம்- தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்- நடிகர்கள் அர்ஜுன் தாஸ் -அசோக் செல்வன்- தயாரிப்பாளரும், இயக்குநருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் – தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பஸ்லியான் – தயாரிப்பாளர் ஜே. எம். பஷீர் உள்ளிட்ட ஏராளமான தமிழ் திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு, புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இவ்விழாவில் தமிழக பள்ளிக் கல்வி துறை – தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தி துறை அமைச்சரான ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்வில் அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், “ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை கொடுத்தால் அது விருது அல்ல. விருது என்றால் ஆண்டுதோறும் வழங்கப்பட வேண்டும். தமிழக முதல்வரின் அனுமதியை பெற்று வெள்ளித்திரை சின்னத்திரை தமிழ் திரை விருதுகள் இனி ஆண்டுதோறும் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நேர்மையான உழைப்பை வழங்குவது திரை உலகம் தான். இவர்கள் அனைவரும் நடமாடும் உழைப்பாளர்கள் சிலைகள் தான். அப்படி இருக்கும்போது நீங்கள் உங்களுடைய கோரிக்கைகளை உரிமையுடன் கேட்கலாம். உங்களுக்கு என்ன தேவையோ, அவை அனைத்தையும் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். முதல் சந்திப்பில் தமிழக முதல்வர் என்னை அழைத்து, ‘மானியத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் படங்கள் எதுவும் பெண்டிங் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அரசு சார்பில் வழங்கப்படும் மானியங்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைவு படுத்துங்கள் ‘ என சொன்னார். இதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு காலத்தில் தமிழ்நாடு தான் சினிமாவில் கேப்பிட்டல் ஆக இருந்தது. இங்கு தான் அனைத்து படப்பிடிப்புகளும் நடைபெறும். கொஞ்சம் கொஞ்சமாக வெவ்வேறு மாநிலங்கள் சென்றது. அதற்கு பலதரப்பட்ட காரணங்கள். அவற்றையெல்லாம் பகுப்பாய்வு செய்வதுதான் எங்களுடைய வேலை. சூட்டிங் ஸ்பாட்டில் மேனேஜரோ… பி ஆர் ஓக்களோ… பர்மிஷனுக்காக பலருக்கு காசு கொடுக்க வேண்டியதிருந்தது. அதற்கு தற்போது ‘நோ ‘ சொல்லப்பட்டிருக்கிறது. யார் கேட்டாலும் ஒரு ரூபாய் கூட கொடுக்க வேண்டாம். உங்களுடன் சிஎம் இருக்கிறார். புரொடக்ஷன் மற்றும் ஆர்டிஸ்டிகளுக்கு என்ன தேவையோ… அதை மட்டுமே பார்த்துக் கொள்ளுங்கள்.
உலகத்தில் வேலையை செய்வதற்காக யாரும் பாராட்ட மாட்டார்கள் ஏனெனில் நம்முடைய சிஸ்டம் அப்படி மாறிவிட்டது நாம் வேலையை செய்து கொண்டிருக்கிறோம். அதை சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறோம். அதை உண்மையாக செய்து கொண்டிருக்கிறோம். ஒளிவு மறைவு இல்லாமல்… வெளிப்படை தன்மையுடன் இயங்குவதற்கான ஒரு முயற்சிதான். ஏனெனில் சினிமா துறையில் தான் கருவாகி… உருவாகி… இன்று ஒரு மாமனிதர் முதலமைச்சர் ஆக கிடைத்திருக்கிறார்.
முத்துக்காளை மனைவிக்கு ஒரு பிரச்சனை என்று போது.. என்னை அழைக்கவில்லை என்றாலும்.. நானாக சென்று, ‘அவர்களை நடிகராக பார்க்காதீர்கள். ஒரு கல்வியாளராக பாருங்கள் ‘என்று அறிவுறுத்தி முழுமையான மருத்துவ சிகிச்சையை கிடைக்கச் செய்தோம். பாவா லக்ஷ்மணன் அண்ணனுடன் நான் ஒரு படத்தில் கூட இணைந்து பணியாற்றியதில்லை. இருப்பினும் எம்எல்ஏ ஹாஸ்டலில் அவருக்கு இடம் கொடுத்துவிட்டேன். கேப்டன் இல்லையென்றால் என்ன…. கேப்டனின் படங்களை பார்த்து தான் நாங்கள் அனைவரும் வளர்ந்திருக்கிறோம். நீங்கள் வாருங்கள் என்று அவரை அன்புடன் அழைத்து அந்த விடுதி அறையை கொடுத்தேன். பாரதிராஜா- பாக்யராஜ்- மறைந்த போது ஓடோடி சென்று முழு அரசு மரியாதை வழங்கியது. அது எங்களுடைய கடமை. அவர்களுக்கு செய்யாமல் நாங்கள் வேறு யாருக்கு செய்யப் போகிறோம்.
முதல்வர் என் மீது வைத்த நம்பிக்கை. என் மீது இங்கு உள்ள எல்லோரும் வைத்திருக்கும் நம்பிக்கை. இதனை நான் நிச்சயமாக காப்பாற்றுவேன். கடைசி மூச்சு வரை நேர்மையாக வேலை செய்து, உங்கள் அத்தனை பேரின் கோரிக்கையையும் மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, அவரின் ஆலோசனையும், அனுமதியும் பெற்று… என்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்வேன் என உறுதி அளிப்பதுடன்..வாழ்த்தி, வணங்கி விடைபெறுகிறேன்” என்றார்.
