காவிரி விவகாரத்தை பேசித்தீர்க்க முதல்வர் விஜய் விருப்பம்; கர்நாடக முதல்வர் சிவகுமார் பேட்டி

புதுடில்லி: காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையை தீர்க்க தமிழக முதல்வர் விஜய் விரும்புகிறார் என கர்நாடக முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.

காவிரி விவகாரம் குறித்து டில்லியில் கர்நாடகா முதல்வர் சிவக்குமார் அளித்த பேட்டி: காவிரியில் இருந்து சிறிதளவு தண்ணீர் திறந்துவிடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே அவர்களின் கோரிக்கை இருமுறை நிராகரிக்கப்பட்டிருந்தது. எனவே, தற்போதைய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வது குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் நான் ஆலோசனை நடத்தியுள்ளேன். நாங்கள் மேல்முறையீடு செய்யவுள்ளோம்; அதன்பிறகு ஒரு முடிவை எடுப்போம்.

பெங்களூரு சென்ற பிறகு, எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் இது குறித்துப் பேசுவேன். இதற்கிடையில், சில விஷயங்கள் குறித்து என்னிடம் நேரில் வந்து பேசத் தமிழகம் தரப்பிலும் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலாளரும் எனக்குக் கடிதம் எழுதியுள்ளார்; தொலைபேசியிலும் என்னிடம் பேசியுள்ளனர். அவர்களை மரியாதையுடன் நடத்துவதும், அவர்களுக்குச் சேர வேண்டியதை வழங்குவதும் எங்கள் கடமை.

சரி, வாருங்கள் என்று நான் அவர்களிடம் கூறியுள்ளேன். காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையை தீர்க்க தமிழக முதல்வர் விஜய் விருப்பம் தெரிவித்துள்ளார்.மேகதாது பகுதி உள்ளிட்ட கர்நாடகாவின் நீர் நிலைகளை பார்வையிட தமிழக முதல்வர் விஜய்க்காக ஹெலிகாப்டரை தயார் நிலையில் வைத்துள்ளோம்; அவருக்கு விளக்கமளிக்க வழக்கறிஞர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவும் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு சிவகுமார் கூறினார்.

Source link