“தம்பி உதயநிதி மட்டும் இவ்வளவு நேரம் பேசினால் எப்படி?”

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று (03-09-26) முதல்வர் விஜய் விதி எண் 110ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் முதல்வர் விஜய் தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

இதையடுத்து, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கையை அத்துறையின் அமைச்சர் முதல்வர் விஜய் தாக்கல் செய்தார். அதில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து முதல்வர் விஜய் இதற்கு உரிய பதிலளிக்க வேண்டும் என்றுக் கூறினார்.

முதல்வர் விஜய் குறித்தும் தவெக அரசின் செயல் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததால், தவெக எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் கேட்ட கேள்விகளுக்கு முதல்வர் பதிலளிக்காமல் அவருக்கு பதிலாக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா பதிலளித்தனர். இதனால் திமுக எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நேரமாக கடும் வார்த்தைப் போர் நடைபெற்றது.

இதையடுத்துப் பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “இன்றைக்கு காவல்துறையை பற்றிய மானியக் கோரிக்கை. இங்கு இருக்கிறவர்கள் எல்லாம் எதிர்க்கட்சிகள் தானே தவிர எதிரி கட்சிகள் கிடையாது. சரியாக இரண்டு மணி நேரமாக ஒரே விவாதத்தைப் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறோம். மொத்தம் 13 பேர் இன்றைக்கு பேச வேண்டும், ஆனால் இப்போது வரைக்கும் தம்பி உதயநிதி ஒருத்தர் மட்டும் தான் பேசி இருக்கிறார். அப்போது மற்ற 12 பேர் எப்போது பேசி முடிப்பது? தயவுசெய்து எல்லோருக்கும் பேச வாய்ப்பு கொடுங்கள். மாறி மாறி சண்டை போடுவதற்கு இது சண்டை மன்றம் இல்லை, சட்டமன்றம் தான். ஆளுங்கட்சி ஒரு கருத்தை சொல்கிறார்கள், எதிர்க்கட்சி அவர்கள் கருத்தை சொல்கிறார்கள். எல்லோரும் கருத்து சொல்லுங்கள். 15, 20 நிமிடம் பேசுங்கள்… ஆனால் இரண்டு மணி நேரமாக ஒரே விவாதத்தை தான் பேசிக் கொண்டிருக்கிறோம். இன்னும் எடப்பாடி பழனிசாமி உட்பட 13 பேர் பேச வேண்டும். இதுவரைக்கும் தம்பி உதயநிதி மட்டும் தான் பேசி இருக்கிறார்” என்று கூறினார்.

அதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், “நான் 2 மணி நேரமாக பேசினேன் என அக்கா பிரேமலதா பேசியிருக்கிறார். ஆனால் நான் வெறும் 35 நிமிஷம் தான் பேசியிருக்கிறேன்” என்று நகைச்சுவையாகப் பேசினார். 

Source link