தர்மேந்திர பிரதான் பதவி விலகணும், ‘ஜென்-சி’ தலைமுறையை நினைத்து பெருமையா இருக்கு: ஜோதிகா பதிவு

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் மாணவர் போராட்டத்திற்கு நடிகை ஜோதிகா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவின் மூலம் ஜோதிகா மாணவர்களுக்குத் தனது ஆதரவை கொடுத்துள்ளார். இதில் விஷயங்களை வெளிப்படையாகப் பேசும் ‘ஜென்-சி’ (Gen-Z) தலைமுறையை நினைத்து பெருமைப்படுவதாகவும், தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் ஜோதிகா குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து ஜோதிகா வெளியிட்டுள்ள பதிவில், “தர்மேந்திர பிரதான் பதவியிலிருந்து விலக வேண்டும். ராஜினாமா செய்ய வேண்டும். நமது நாட்டின் மாணவர்களுடனும் அவர்களின் எதிர்காலத்துடனும் நான் நிற்கிறேன். நான் பொறுப்பாக இருப்பவர்களின் கூற்று பக்கம் நிற்கிறேன். ஜனநாயக இந்தியாவிற்காக நிற்கிறேன். கல்விச் சீர்திருத்தத்திற்காக நிற்கிறேன்.

சோனம் வாங்சுக், அபிஜித் திப்கே, சௌரவ் தாஸ், உங்களைப் போன்ற பிள்ளைகளை வளர்க்கக்கூடிய தாய்களாக இருக்க நாங்கள் விரும்புகிறோம். எதையும் மறைக்காமல் வெளிப்படையாகப் பேசும் இந்த ‘ஜென்-சி’ தலைமுறையை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். நீங்கள் அனைவரும் இணைந்து நிரூபித்துவிட்டீர்கள், ‘நாம்’ தான் இந்தியா என்று. அழுத்தங்களைத் தகர்த்தெறிந்ததற்கு நன்றி. எங்களை அச்சமற்றவர்களாக மாற்றியதற்கு நன்றி சி.ஜே.பி ஜெய் ஹிந்த்,” என்று ஜோதிகா பதிவிட்டுள்ளார்.

டெல்லியில் நடைபெறும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல பிரபலங்கள் களமிறங்கியுள்ளனர். மலையாள சினிமாவில், மம்மூட்டி, இந்திரஜித் சுகுமாரன், மீனாட்சி, குஞ்சாக்கோ போபன், சிஜு சன்னி, ரஹ்மான், வினய் ஃபோர்ட், காளிதாஸ் ஜெயராம், நஸ்லின, நிகிலா விமல், கிரேஸ் ஆண்டனி, தீபா தாமஸ், ஹாஷிர் உள்ளிட்டோர் இன்று தங்களது எதிர்வினையை ஆற்றியுள்ளனர்.

கடந்த நாளில் விஸ்மயா மோகன்லால், டொவினோ தாமஸ், பார்வதி திருவோடு, ரிமா கல்லிங்கல், பிராச்சி தெஹ்லான் ஆகியோர் தங்களது வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தனர். பாலிவுட் மற்றும் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும் டெல்லி போராட்டத்திற்குத் தங்களது ஆதரவை அறிவித்திருந்தனர்.



Source link