தலைமைச் செயலகத்தைத் துப்பாக்கியால் சுட்டுத் தகர்ப்பது போன்ற வீடியோவை வெளியிட்ட நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தின், தலைமைச் செயலகமான ’விதான சௌதா’வில் குண்டு வெடிப்பது போன்ற ஏ.ஐ வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதில், இளைஞர் ஒருவர் தலைமைச் செயலகத்தைக் குறிவைத்து சுடுவது போலவும், உடனே தலைமைச் செயலகம் வெடிப்பது போலவும் சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், பலரும் இதற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். இதையடுத்து, அந்த வீடியோவை வெளியிட்ட இளைஞரைக் கர்நாடக காவல்துறை கைது செய்தது.
முதற்கட்ட விசாரணையில், பீகாரைச் சேர்ந்த அந்த இளைஞர் ஹஸ்ரத் அலி ஷோயப் (25) என்பதும், அவர் வேலை நிமித்தமாகக் கர்நாடகாவிற்கு வந்ததும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்டதைத் தொடர்ந்து, இவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், குறிப்பிட்ட வீடியோவை நீக்கியதுடன், அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் முடக்கியுள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கர்நாடக காவல்துறை, “பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துவது போலவும், அரசின் பெருமைக்குரிய சின்னங்களை அவமதிப்பது போலவும் ஏஐ மூலம் ரீல்ஸ், புகைப்படங்களை உருவாக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் சட்டப்படி குற்றம்” என எச்சரித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
