– சிறப்பு நிருபர் –
“தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு எதிராக, பார்லிமென்டில் எதிர்க்கட்சியினர் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வந்தால், அது உரிய விதிமுறைகளின்படி பரிசீலிக்கப்படும்,” என, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவி விலகக்கோரி எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பார்லி., குளிர்கால கூட்டத்தொடரில், அவருக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானத்தை கொண்டு வர எதிர்க்கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து டில்லியில் செய்தியாளர்களிடம் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதாவது: தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிராக எதிர்க்கட்சியினர் புதிய நோட்டீஸ் எதையும் இதுவரை முறையாக சமர்ப்பிக்கவில்லை. அவ்வாறு ஏதேனும் புதிய நோட்டீஸ் அளிக்கும்பட்சத்தில், அரசியலமைப்பு நடைமுறைகளின்படி நாங்கள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்போம். பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் இன்னும் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வரவில்லை என்பதையும் தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.
லோக்சபா சபாநாயகர் என்பவர் இரு தரப்புக்கும் பொதுவானவர். உச்ச நீதிமன்ற நீதிபதியை நீக்கும் நடைமுறையைப் போல், தலைமை தேர்தல் கமிஷனருக்கும் நடைமுறை வகுக்கப்பட்டுள்ளது. எனவே, பார்லிமென்ட்டில், தலைமைத் தேர்தல் கமிஷனருக்கு எதிராக, எதிர்க்கட்சியினர் சார்பில் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வந்தால், அப்போது, அதற்கான நடைமுறை உரிய முறையில் பின்பற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, கடந்த மார்ச் மாதத்தில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த, 130 லோக்சபா எம்.பி.,க்கள் கையெழுத்திட்டு தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை நீக்கக் கோரி அளித்த நோட்டீசை, சபாநாயகர் ஓம் பிர்லா விதிமுறைகளின்படி நிரா கரித்திருந்தார்.
