உள்ளாட்சி முதல் பார்லி., வரை 8 லட்சம் பதவியை கைப்பற்றணும்: அண்ணாமலை திட்டவட்டம்

கிருஷ்ணகிரி: ‘‘கரப்பான் பூச்சி கட்சிக்கு நாங்கள் ஆதரவு அளிக்கவில்லை. அவர்கள் நோக்கம் வேறு, எங்கள் நோக்கம் வேறு,” என, ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கிருஷ்ணகிரியில் நேற்று நடந்த, ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின், பெண்கள் வளர்ச்சி மாநாட்டில் பங்கேற்ற அவர் பேசியதாவது: ஒவ்வொரு தேர்தலிலும் மொத்த ஓட்டுப்பதிவில் பெண்களின் பங்கு 51 சதவீதம்; ஆண்களின் பங்கு 49 சதவீதம். ஆனால் பெண்களுக்கான அதிகாரம், 5 முதல் 10 சதவீதம் தான் உள்ளது. எனவே, பெண்களின் கரங்களை உயர்த்தி, அவர்களை முதலாளிகளாக, தொழில் முனைவோராக மாற்ற வேண்டும் என்பதே எங்கள் அமைப்பின் இலக்கு.

முதல்வர் விஜயை எனக்கு தெரியாது; அவருடன் பழகியதும் கிடையாது. ஆனால் கடந்த, தி.மு.க., ஆட்சியில் விஜய்க்கு தொல்லை அளிக்கப்பட்டபோது, அவருக்காக குரல் கொடுத்தேன். அதேபோல, தற்போது விஜய் தலைமையிலான த.வெ.க., அரசின் தவறுகளையும் சுட்டிக் காட்டுகிறேன். முதல்வர் விஜய், நுாலகத்தை திறக்க செல்வதற்கு 6 கோடி ரூபாய் செலவு, மேட்டூர் அணையில் நீர்த்திறப்புக்கு செல்வதற்கு பல கோடி ரூபாய் செலவு என்பதெல்லாம் தேவையில்லை. தமிழகத்திற்கு புதிய தொழிற்சாலைகளும், வேலைவாய்ப்புகளும் தான் தேவை.

வீ த லீடர்ஸ் அமைப்பை ஆலமரமாக விரிவு செய்ய வேண்டும். நமது அமைப்பில் உள்ள 21 லட்சம் உறுப்பினர்களும், சமூக வலைதளங்களில் ‘லைக்’ போடுபவர்களாக இருக்கக்கூடாது. ‘ஆட்சியை பிடிக்க வேண்டும்’ என்ற நோக்கில் செயல்படுபவர்களாக இருக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் முதல் பார்லி., வரை உள்ள, 8 லட்சம் பொறுப்புகளையும் நாம் கைப்பற்ற வேண்டும்.

கரப்பான் பூச்சி கட்சிக்கு ஆதரவு அளிக்கிறோமா என்றால் ‘இல்லை’ என்று தான் கூறுவேன். அவர்கள் நோக்கம் வேறு, நம் நோக்கம் வேறு. யார் தவறு செய்தாலும் நாம் சுட்டிக் காட்ட வேண்டும். எனக்கு யாரும் தேசியத்தை கற்றுக்கொடுக்க முயற்சிக்க வேண்டாம். இவ்வாறு பேசினார்.

Source link