மயிலாடியில் தயாரான 24 அடி ஆஞ்சநேயர் சிலை கேரளா பயணம்!

ஒரே கல்லில் 25 அடி, 38 டன்! குமரி மயிலாடியில் உருவான பிரம்மாண்ட ஆஞ்சநேயர் சிலை கேரளா கோவிலுக்கு பயணம் – கிரேன் மூலம் ஏற்றி அனுப்பி வைப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் வழுக்கம்பாறையைச் சேர்ந்த பிரபல சிற்பக் கலைஞர் (ஸ்தபதி) மதன்குமார் மற்றும் அவரது குழுவினர் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பணியை மேற்கொண்டுள்ளனர். சுமார் 85 டன் எடையுள்ள ஒரே பாறைக்கல் இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, கடந்த 6 மாத காலமாக இரவு பகலாகத் தீவிரமாகச் செதுக்கப்பட்டு இந்த ஆஞ்சநேயர் சிலை பிரம்மாண்டமாக வடிவமைத்துள்ளனர்.

இந்தச் சிலை, 5 அடி உயர பீடம் மற்றும் 19 அடி உயர ஆஞ்சநேயர் உருவம் என மொத்தம் 24 அடி உயரத்தில் அமைந்துள்ளது. செதுக்கி முடிக்கப்பட்ட பின் இதன் தற்போதைய எடை 40 டன் ஆகும்.பிரபஞ்சத்தின் 12 ராசிகள் மற்றும் 12 ஆதித்யர்களைக் (சூரிய வழித்தோன்றல்கள்) குறிக்கும் குறியீடாகவே இந்தச் சிலை 24 அடி உயரத்தில் செதுக்கப்பட்டுள்ளதாக ஸ்தபதி மதன்குமார் தெரிவித்துள்ளார்.

இந்த பிரமாண்ட ஆஞ்சநேயர் சிலை, கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே அமைந்துள்ள பவுர்ணமி காவு கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதற்காக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, ராட்சத கிரேன் உதவியுடன் டாரஸ் லாரியில் பாதுகாப்பாக ஏற்றப்பட்டு கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Source link