சென்னை: தவெக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி, மதச்சார்பற்றது என்பது மிகப்பெரிய பொய் என்று பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பாஜ அலுவலகத்தில் அவர் பேசியதாவது; மதச்சார்பற்ற கூட்டணி என்று எவ்வளவு பெரிய பொய்யை சொல்லுகிறார்கள். சபநாயகர் கையில் ஜெப மாலையோடு வருகிறார். இதுவரையில் எந்த சபாநாயகரும் ஜெப மாலையோடு சபைக்கு வந்ததில்லை. பைபிளை குறிப்பிட்டு சொன்னது இல்லை. அது தவறில்லை. பகவத் கீதையையோ, குரானையோ குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார்களா? ஆனால், கிறிஸ்துவ மதத்திற்காக மட்டுமே இருக்கிறார். கிறிஸ்துவ மக்களுக்கு மட்டும் தான் முதல்வரா? இல்லை அனைத்து மக்களுக்கும் முதல்வரா? ‘இது மதசார்போடு நடந்து கொண்டு, மதச்சார்பற்ற கூட்டணி என்று கூறினால், எப்படி ஏற்றுக் கொள்வது. முழுக்க முழுக்க பொய். முற்றிலும் பொய். இன்னைக்கு இரு தொகுதிக்கு இடைத்தேர்தல் வர வேண்டிய என்ன அவசியம் ஏற்பட்டது. குதிரைப்பேரம் தான்.
நிதியமைச்சர், சபாநாயகர், முதல்வர், நான் ஒரு சிறுபான்மை அரசு என்று சொல்லிக்கொண்டு, மதச்சார்பற்ற அரசு என்று சொல்லாதீங்க. மதச்சார்புள்ள அரசு என்று சொல்லிவிட்டு, கிருஷ்ண ஜெயந்தி, முஸ்லிம் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லுங்க. நான் அதை ஏற்றுக் கொள்கிறேன். நான் எதையும் சொல்லக் கூடாது என்று சொல்லவில்லை.
ஒரு கிறிஸ்துவன் போக முடியாத இடத்திற்கு நான் சென்றிருக்கிறேன். நோவா மலை, எகிப்து, இஸ்ரேல், ஜெருசலேம், பெத்லகேம் ஆகிய இடங்களுக்கு நான் சென்றிருக்கிறேன். நான் சொல்வேன், மதச்சார்பற்றவன் என்று. பாஜ மட்டும் மதசார்புள்ள கட்சியா? ஒரு கிறிஸ்துவர், முஸ்லிமுக்கு ஒரு பிரச்னை என்றால், அனைத்து கட்சிகளுடன் பாஜவும் நிற்கும். நாங்கள் மதச்சார்புள்ள கட்சி என்று சொல்ல மாட்டோம். எங்களைப் பொறுத்தவரையில் இந்த நாடு நன்றாக இருக்க வேண்டும்.
பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் யார் யாருக்கு என்ன தகுதியிருக்கு? என்னுடைய உயரம் என்ன என்று தெரிய வேண்டும். முதலில் உங்ள் உயரத்தை தெரிந்து கொண்டு பேச வேண்டும். ராகுல், விஜய்க்கு இது பொருந்தும்.
குதிரை பேரம் நடந்திருக்கிறது. இப்போது, அரசாங்கம் நடந்து கொண்டு தானே இருக்கிறது. அப்படியிருக்கையில் இடைத்தேர்தலுக்கு இப்போது என்ன அவசரம். ஒரு கட்சியில் யார் வேணாலும் போய் சேரலாம். ஆனால், நீங்கள் (தவெக) பணம் கொடுத்து விலைக்கு வாங்கி உள்ளீர்கள் என்பது தான் என்னுடைய குற்றச்சாட்டு, இவ்வாறு அவர் கூறினார்.
