கிருஷ்ணகிரி: தமிழகம் முழுதும் தாசில்தார் அலுவலகங்களில், பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் பெறப்படுவதாக வந்த புகாரால், லஞ்ச ஒழிப்பு போலீசார், ஜூலை 17ல் சோதனை நடத்தினர்.
கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில் நடந்த சோதனையில், 2.22 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து, சிறப்பு மாவட்ட ஆய்வு குழு அலுவலர் சக்திவேல், 51 புகார்படி, லஞ்ச ஒழிப்பு போலீசார், துணை தாசில்தார் கணேசன், 42, உட்பட, 10 பேர் மீது, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
* கரூர் தாலுகா அலுவலகத்தில் நேரடியாக, ஒரு லட்சத்து, 18,130 ரூபாய், ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செயலியான ‘ஜிபே’ மூலம், 16 லட்சத்து, 33,654 ரூபாய் என, மொத்தம், 17 லட்சத்து, 51,784 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, கரூர் தாசில்தார் சண்முக பிரகாசம், 49, உட்பட, 13 பேர் மீது, போலீசார் வழக்கு பதிந்தனர்
* விருதுநகர் வெம்பக்கோட்டை தாலுகா அலுவலகத்தில், 1.40 லட்சம் ரூபாய் பிடிபட்ட விவகாரத்தில், தாசில்தார் ஆண்டாள், 48, உட்பட, 8 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்தனர்.
