தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நிலையில், இரு தொகுதிகளிலும் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
அதிமுகவில் ஏற்பட்ட பிளவு
2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அரசியல் அதிருப்தி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய்யின் எழுச்சி ஆகியவை தமிழக அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தின. குறிப்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அக்கட்சியைச் சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்ததாக கூறப்படுகிறது.
அவ்வாறு சுமார் 6 எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த நிலையில், அந்த தொகுதிகளில் இரண்டு தொகுதிகளான மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் தற்போது இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், இந்த இடைத்தேர்தல் அதிமுக, தவெக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு முக்கியமான அரசியல் களமாக மாறியுள்ளது.
வேட்பு மனு தாக்கல் செய்த சுகன்யா
இந்த நிலையில், தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுகன்யா இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் சுகன்யா தனது வேட்பு மனுவை சமர்ப்பித்தார். வேட்பு மனு தாக்கலின்போது முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
சூடுபிடிக்கும் தாராபுரம் களம்
தாராபுரம் தொகுதியில் திமுக சார்பில் சுகன்யாவும், தவெக சார்பில் சத்யபாமாவும் களமிறங்கியுள்ள நிலையில், தேர்தல் போட்டி விறுவிறுப்படைந்துள்ளது. அதிமுக சார்பில் வேட்பாளர் அறிவிப்பு உள்ளிட்ட அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் இந்த போட்டியை மேலும் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல், ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏக்களின் தொகுதிகளில் நடைபெறுவதால், இந்த தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
