கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டெங்கு மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் அருண்ராஜ், “தற்போது டெங்கு பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. டெங்கு காரணமாக உயிரிழப்பு எதுவும் இல்லை. கோவையில் ஒரு மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்.
கோவை இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஒரு செவிலியர் கல்லூரி துவங்கப்படும். மருத்துவர், செவிலியர் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
காலியாக உள்ள 7,724 செவிலியர்கள் பணியிடங்களை மாவட்ட நல சங்கம் மூலம் நிரப்ப நடவடிக்கைகள் எடுக்கபட்டுள்ளது. நேர்மையான முறையில், வெளிப்படையான முறையில் பணியமர்த்தப்படுவார்கள். புதிய மருத்துவப் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள்.
புதிய தலைமைச் செயலகம் ஏன் தேவை என முதல்வர் தனது அறக்கையில் சொல்லி இருக்கிறார். அரசியல் காரணங்களுக்காகச் சில பேர் வேண்டாம் சொல்லுவார்கள். இது இந்த ஐந்தாண்டுகளுக்காகக் கிடையாது, அடுத்த தலைமுறைக்காகத்தான் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. கண்டிப்பாக புதிய தலைமைச் செயலகம் தேவை. மருந்துகள் பற்றாக்குறை எதுவும் இல்லை.
தாராபுரம் இடைத்தேர்தல்ல் எங்களது வியூகம் நான்கு மாத ஆட்சியின் சாதனையினை மக்களிடம் சொன்னாலே போதும். லஞ்சம் ஊழலைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை யாரும் நம்பாமல் இருந்தார்கள். ஆனால் லஞ்சம், ஊழலை த.வெ.க ஆட்சியில் கட்டுப்படுத்தி இருக்கிறோம், இது ஒன்றே போதும்.
தமிழக வெற்றிக் கழகம் என்பது அரசியல் கட்சி கிடையாது, இது ஒரு இயக்கம். இது அடுத்த தேர்தலுக்காகக் கிடையாது. அனைவரையும் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது.
தாராபுரம் தொகுதியில் நாங்கள் ஜெயிப்பது உறுதி, இது வரலாறு காணாத அளவிற்கான மிகப்பெரிய வெற்றி இருக்கும். வெற்றி என்பது அரசியல் காரணங்களுக்காக இருக்காது, தமிழகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
