சென்னை: ”எதற்கும் அஞ்சாமல் உண்மையை உரக்கச் சொல்ல வேண்டும் என்ற உணர்வுடன் பாடுபடும் தினமலர் நாளிதழுக்கு வாழ்த்துக்கள்” என்று, தினமலர் நாளிதழின் 75 ஆண்டு நிறைவு முன்னிட்டு சிறப்பு தபால் தலையை வெளியிட்டு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.
‘தினமலர்’ நாளிதழின் பவள விழாவை முன்னிட்டு, சென்னையில் இன்று(செப்.,5) தபால் தலை வெளியீட்டு விழா நடந்தது. இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், தபால் தலையை வெளியிட்டார். நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் பேசியதாவது: பத்திரிகை நடத்துவதே கடினம்; அந்த பத்திரிகையை நடுநிலையோடு நடத்துவது அதை விட கடினம்.
இன்றைக்கு தினமலர் உண்மையின் உரைகல் என்பது உண்மை தான் என்பதை பறை சாற்றும் வகையில் பல்வேறு கட்சிகளை சார்ந்த தலைவர்கள் எல்லாம் ஒரு முகமாக, ஒரு அணியாக அமர்ந்து இருக்கும் இந்த நிலையை உண்மை என்று தான் பறை சாற்றுகிறது. 75 ஆண்டு காலம் ஓயாமல் உண்மையின் குரலாக இருப்பது என்பது நடைமுறையில் கடினம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று தான்.
அப்படி உழைக்கின்ற போது தான் அந்த உழைப்பு வரலாறு ஆகு மாறுகிறது. அந்த பவள விழாவில் வரலாற்றில், சிறப்பு தபால் தலையை வெளியிட்டு உங்களோடு எனது கருத்துகளை பகிர்ந்து கொள்கிறேன்.
அப்படியொரு இலக்கணத்திற்கு சொந்தமான தினமலர் தினம் தினம் பூக்கிற மலராக இருப்பது நமது தமிழுக்கு பெருமை என்று கருதுகிறேன். உண்மையின் உரைகல் ஆக திகழ வேண்டும் என்ற உறுதியோடு 75 ஆண்டுகளை தினமலர் நிறைவு செய்து இருக்கிறது.
சில பேர் பிறந்து வளர்ந்து போராளியாக மாறுவார்கள், ஆனால் சில பேர் பிறக்கிற போதே போராளியாக இருப்பார்கள். தினமலர் அப்படி பிறந்த இடத்தில், பிறந்த இடத்திற்கே எதிராக போராடிய மகத்தான பத்திரிகையாக இருக்கிறது. திருவனந்தபுரத்திலேயே பிறந்தாலும் அந்த பகுதியை சேர்ந்த சில பகுதிகளை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்று போராடிய போராளியாக ராமசுப்பு ஐயர் திகழ்ந்து இருக்கிறார்.
அது தான் இன்றைக்கு வரைக்கும் தினமலர் நாளிதழுக்கு மகத்தான உத்வேகத்தை, எதற்கும் அஞ்சாமல் உண்மையை உரக்க சொல்ல வேண்டும் என்கிற உணர்வை தந்து இருப்பதாக நான் கருத்துகிறேன். அப்படி பிறக்கும் போதே சில பேர் மகத்தான ஆசையோடு பிறக்கிறார்கள். இவ்வாறு சிபி ராதாகிருஷ்ணன் பேசினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
தினமலர் பவள விழா தபால் தலை வெளியீட்டு விழா கொண்டாட்டம்; நேரலை ஒளிபரப்பு
