சென்னை: ‘தினமலர்’ நாளிதழின் பவள விழாவை முன்னிட்டு, சென்னையில் இன்று(செப்.,5) தபால் தலை வெளியீட்டு விழா நடக்கிறது. இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், தபால் தலையை வெளியிட்டு, பவள விழா சிறப்புரை ஆற்றுகிறார்.
கடந்த 75 ஆண்டுகளாக, ஒரு செய்தித்தாளாக மட்டுமல்லாமல், மக்களின் நம்பிக்கையின் குரலாக, ‘தினமலர்’ நாளிதழ் திகழ்ந்து வருகிறது.
அர்ப்பணிப்பு
சொற்களில் அச்சமின்மை, கொள்கைகளில் தடம் மாறா உறுதி, உண்மையின் உரைகல் என, அர்ப்பணிப்புடன் பயணித்து வரும், ‘தினமலர்’ நாளிதழுக்கு, இந்த ஆண்டு பவள விழா. அதை முன்னிட்டு, தபால் தலை வெளியீட்டு விழா, சென்னை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அரங்கில், இன்று மாலை நடக்கவுள்ளது.
மாலை 4:30 மணிக்கு விழா தொடங்குகிறது. துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், தபால் தலையை வெளியிட்டு, ‘தினமலர்’ நாளிதழின் பவள விழா சிறப்புரை ஆற்றுகிறார்.
விழாவுக்கு, சென்னை நகர மண்டல அஞ்சல் துறை இயக்குநர் மேஜர் மனோஜ், முன்னிலை வகிக்கிறார். ‘தினமலர்’ இணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரை ஆற்றுகிறார். ‘தினமலர்’ வேலுார் பதிப்பாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி நன்றியுரை நிகழ்த்துகிறார்.
சிறப்பு காணொளி
‘தினமலர்’ நாளிதழின், 75 ஆண்டு கால பயணம் மற்றும் பாரம்பரியம் குறித்த சுருக்கமான கண்ணோட்டத்தை, பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே தொகுத்து வழங்குகிறார்.
விழாவில், ‘தினமலர்’ நாளிதழின், 75 ஆண்டு கால பயணம் மற்றும் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் குறித்து, சிறப்பு காணொளி ஒளிபரப்பப்பட உள்ளது.
