தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் திமுக சார்பில் கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ ஜீ.வி. மார்க்கண்டேயன், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயை மிரட்டும் வகையில் கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 20ஆம் தேதி விளாத்திக்குளம் அம்பாள் நகரில் உள்ள மார்கண்டேயன் இல்லத்திற்கு நூற்றுக்கணக்கான போலீசார் குவிந்து அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.
அதன் பின்னர் அவரை தூத்துக்குடியில் உள்ள மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அவர் மீது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக நடைபெற்ற 9 மணிநேர விசாரணைக்கு பின் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக மார்க்கண்டேயனை போலீசார் அழைத்துச் சென்றனர். இந்த மருத்துவப் பரிசோதனைக்குப் பின் நீதிபதி சுமதி முன் முன்னிறுத்தப்பட்ட நிலையில் ஜீ.வி. மார்க்கண்டேயனை ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி பாளையங்கோட்டை சிறையில் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் அடைக்கப்பட்டார். முன்னதாக போலீசார் தரப்பில் போலீஸ் காவலில் எடுத்து ஜீ.வி.மார்க்கண்டேயனை போலீசார் விசாரிக்க அனுமதி கோரப்பட்ட நிலையில், அதனை மறுத்த நீதிபதி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து எம்.எல்.ஏ மார்கண்டேயனை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அதே போல், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என திமுக எம்.எல்.ஏ மார்கண்டேயனும் அந்த நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த இரண்டு மனு மீதான விசாரணை கடந்த ஜூலை 22ஆம் தேதிதூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சுமதி முன்பு வந்தது. அப்போது இருதரப்பு மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று (28-07-26) நீதிமன்றத்தில் வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் உள்நோக்கத்துடனும் பேசவில்லை என வாதிடப்பட்டது. அதனை தொடர்ந்து, திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் சட்டப்படியே கைது செய்யப்பட்டார் என அரசு தரப்பில் வாதம் எடுத்து வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டது.
