திருச்சி திருவெறும்பூர் காந்தி நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் குத்தூஸ். இவரது மகன் அர்ஷீத் (வயது 21). இதேபோன்று காந்திநகர் ஆறாவது தெரு பகுதியை சேர்ந்தவர் மார்க்கோ இவரது மகன் பிரடி (வயது 21). இருவரும் திருச்சியை அடுத்த துறையூர் தனியார் பொறியியல் கல்லூரியில், இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் சேர்ந்துள்ளார்கள். இதையடுத்து இருவரும் கல்லூரி திறக்கும் முதல் நாளான இன்று ஒரே இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு புறப்பட்டனர்.
லட்டு டப்பாவுக்கு பதிலா 3 மாச சம்பளம் போனஸ்… இந்த வேல எனக்கு வேண்டாம்; ஜப்பான் ஒர்க் கல்சரை நக்கல் செய்த இந்தியர்
அப்பொழுது இரு சக்கர வாகனத்தை பிரடி ஓட்டினார், பின் சீட்டில் அர்ஷீத் அமர்திருந்தார். இவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில், திருவெறும்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது அரியமங்கலம் எஸ்.ஐ.டி மைதானம் எதிரே, பின்னால் வந்த ஆமினி பேருந்து இவர்களை முந்திச் செல்ல முயன்றது. அதே நேரத்தில், எதிர்புறம் ஒருவழிப்பாதையில் ஆட்டோ ஒன்றும் வந்துள்ளது.
இவற்றுக்கு இடையே நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது.
இந்தக் கோர விபத்தில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே அர்ஷீத் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரது நண்பர், திருச்சி அரசு பொது மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து போக்குவரத்து தெற்குப் புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் திருச்சி பொன்மலைப்பட்டி அடைக்கல மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் காணிக்கை ராஜ். இவர் அந்தப் பகுதியில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் வெளியூர் செல்வதற்காக தனது வீட்டிலிருந்து காரை வெளியே எடுத்து அந்த பகுதியில் உள்ள அடைக்கல மாதா கோவில் கிறிஸ்தவ ஆலயம் முன்பு நிறுத்த சென்றுள்ளார்.
அப்போது அந்த பகுதியில் வசிக்கும் ரூபன் என்பவரின் மகன் விஜோஜாய் (வயது 3) என்ற குழந்தை வீட்டில் இருந்து வேகமாக ஓடி வந்து சாலை அருகே உள்ள அடைக்கல மாதா கோவிலுக்கு சென்றுள்ளது. குழந்தை சென்ற சில நிமிடங்களிலேயே அக்குழந்தையின் பாட்டியும் வேகமாக கோவிலுக்கு சென்றுள்ளார். அப்பொழுது அங்கு கார் நிறுத்த சென்ற காணிக்கைராஜ் காரை பின்னோக்கி இயக்கியபோது திடீரென்று எதிர்பாராத விதமாக குழந்தை விஜோ ஜாய் மீது மோதியது.
இந்த விபத்தில் காரின் பம்பரில் மோதி கீழே விழுந்ததில் குழந்தை விஜோ ஜாய் தலையில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் காணிக்கைராஜ் மற்றும் குழந்தையின் பாட்டி, பெற்றோர், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக குழந்தை விஜோ ஜாய்யை அதே காரில் ஏற்றிக்கொண்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இந்த விபத்து சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் பிரேத பரிசோதனைக்காக குழந்தையின் உடல் திருச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
க.சண்முகவடிவேல்
