திருச்சி காவிரியில் செத்து மிதக்கும் மீன்கள்; ஆடிப் பெருக்கு வேளையில் நோய் தொற்று அபாயம்

எல்.நினோ பாதிப்பால் தமிழகத்தில் நீர்நிலைகள் வற்றி வரும் நிலையில், திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் தேங்கியுள்ள நீரில் பல்லாயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. ஆடி அமாவாசை மற்றும் ஆடி 18 விழாக்கள் நெருங்கும் வேளையில் ஏற்பட்டுள்ள இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களிடமும் சமூக ஆர்வலர்களிடமும் நோய் தொற்று பரவும் அச்சத்தை உண்டாக்கியுள்ளது.

தமிழகத்தில் எல்.நினோ பாதிப்பால் பருவ மழை பொய்த்து போய் நீர் நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. அதீத வெப்பத்தால் காவிரி கல்லணை கால்வாய் என பல்வேறு ஆறுகளிலும் பள்ளங்களில் தேங்கிய நீரும் வற்றி வருகிறது.
மேலும், வழக்கமாக ஜூன் மாதம் திறக்கக்கூடிய மேட்டூர் அணை திறக்கப்படாததால் காவிரி ஆற்றில் நீர் வரத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது.

குடிநீர் தேவைக்காக மட்டுமே அவ்வப்போது நீர் திறக்கப்பட்டு வருகிறது. அந்த நீர் காவிரி மணல் பரப்பில் ஆங்காங்கே குளம்போல் தேங்கி நிற்கிறது. வரும் ஆடி 18 மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் பொதுமக்கள் இந்த நீரோடைகளை பயன்படுத்த திட்டமிட்டிருந்த நிலையில், ஸ்ரீரங்கம் அம்மா மண்டப காவிரி ஆற்றில் ஆங்காங்கே குளம் போல் தேங்கிய நீரில் பல்லாயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. இந்த காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவி பொது மக்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நீரின் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், செத்து மிதக்கும் மீன்களை அகற்றி நோய் தொற்று பரவும் முன் படித்துறையைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவிரி ஆற்றில் அதீத வெப்பம் காரணமாக மீன்கள் செத்ததா? அல்லது சமூக விரோத கும்பல் மீன் பிடிப்பதில் ஏற்பட்ட போட்டிகள் காரணமாகஏதும் நச்சுத்தன்மையை நீரில் கலந்தனரா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இன்னும் சில தினங்களில் ஆடி அமாவாசை ஆடி 18 வரவிருக்கும் நிலையில் இருக்கும் நீரை சுகாதாரத் தன்மையுடன் பொதுமக்கள் பயன்படுத்த முடியுமா என்ற கேள்வி, அச்சம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தி: க.சண்முகவடிவேல் – திருச்சி

Source link