திருச்சி தென்னூரில் அமைந்துள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலக வளாகத்தில், புதிய மின் இணைப்பு வழங்குதல் மற்றும் மின்மாற்றங்களைச் செய்தல் போன்ற பணிகளுக்காக பொதுமக்களிடமிருந்து நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் லஞ்சம் பெறப்படுவதாக திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய புகார்கள் வந்தன.
இந்த புகார்களின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் கடந்த ஆகஸ்ட் 27 அன்று மின்வாரிய அலுவலகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையின்போது, அங்கிருந்த மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடமிருந்து கணக்கில் வராத ரூ. 1.07 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செயலியான ‘கூகுள் பே’ மூலம் மட்டும் ரூ. 13.58 லட்சம் அளவிற்கு லஞ்சப் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் குறிப்பாக, உதவி மின்பொறியாளர் கமலநாதன் என்பவரின் வங்கி கணக்கில் மட்டும் சுமார் ரூ. 9 லட்சம் லஞ்சப் பணம் இருந்ததும், சதீஷ்குமார் என்ற ஊழியரிடம் ரூ. 45,000 இருந்ததும் சோதனையின் போது அம்பலமானது.
இந்த முறைகேடுகள் மற்றும் லஞ்சப் பணப் பரிவர்த்தனைகள் அனைத்தும் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தற்போது அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட 3 பெண் அதிகாரிகள் மற்றும் 9 ஆண் ஊழியர்கள் என மொத்தம் 12 மின்வாரிய ஊழியர்கள் மீது வழக்கு பதியப்பட்டு, துறை ரீதியான மேல் நடவடிக்கை மற்றும் லஞ்ச ஊழல் கண்காணிப்பு தடுப்பு துறை சார்பிலும் மேல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
செய்தி: க.சண்முகவடிவேல்
