திருப்பதி நடைபாதையில் சிறுத்தை நடமாட்டம் – பக்தர்களுக்கு எச்சரிக்கை

சிறுத்தை நடமாட்டம் குறித்து பக்தர்கள் திருப்பதி தேவஸ்தான வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

திருப்பதி கோவிலுக்கு ஸ்ரீவாரி மெட்டு மற்றும் அலிபிரி நடைபாதை வழியாக பக்தர்கள் செல்கின்றனர்.

சிறுத்தை நடமாட்டம்

நடைபாதை வழி முழுவதும் அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது. இதனால் அடிக்கடி யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் நடைபாதைக்குள் வருகின்றன. இதனால் பக்தர்கள் அச்சத்துடன் தரிசனத்திற்கு நடந்து செல்கின்றனர்.

அலிபிரி நடப்பாதை

இந்த நிலையில் நேற்று மாலை அலிபிரி நடப்பாதை வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு சென்று கொண்டிருந்தனர். 3-வது மைலில் உள்ள ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேயர் சாமி கோவில் அருகே சிறுத்தை ஒன்று அங்கும், இங்கும் நடமாடியது. இதனைக் கண்ட பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு மீண்டும் திரும்பிச் சென்றனர். அப்போது சிறுத்தை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. சிறுத்தை நடமாட்டம் குறித்து பக்தர்கள் திருப்பதி தேவஸ்தான வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் பக்தர்களை 20, 30 பேர் குழுக்களாக அனுப்பி வைத்தனர். சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் மிகுந்த கவனத்துடன் நடப்பாதையில் செல்லுமாறு தேவஸ்தான அதிகாரிகள் பக்தர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

24 மணி நேரம்

திருப்பதி கோவிலில் பத்கர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று ரூ.3.95 கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆனது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Source link