திருமணி முத்தாறில் சாயக்கழிவு; முதல்வர் நடவடிக்கை எடுக்கணும்: பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தல்

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் சேலம் கந்தன்பட்டி பைபாஸ் அருகே திருமணி முத்தாற்றில் கழிவுநீர் தேங்கி நிற்பதை பார்வையிட்டு ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- 

கல்வராயன் மலையும், சேர்வராயன் மலையும் இணையும் இடத்தில் திருமணிமுத்தாறு உருவாகி சேலம் மாநகரத்தில் மையப் பகுதியில் வழியாக சென்று பரமத்தி வேலூர் அருகே காவிரியில் கலக்கிறது. இந்நதியில் வரக்கூடிய தண்ணீர் முற்றிலும் மூலிகை மருத்துவம் குணம் கொண்ட தண்ணீராக வருகிறது. சேலம் மாநகரத்தில் இருக்கிற சாயக்கழிவு பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் ஒட்டுமொத்தமாக சேலம் மாநகரமே விஷமாக மாறி வருகிறது. காற்று மாசு ஏற்பட்டுள்ளது. மருதில்லா நோய் தாக்குதலுக்கு மக்கள் ஆளாக கூடிய பேராபத்து ஏற்பட்டுள்ளது.
 
ஒட்டுமொத்தமாக நிலத்தடி நீர் விஷமாகிவிட்டது கழிவுநீர் காவிரியில் கலப்பதால் காவிரி நதியே நம்பி வாழக்கூடிய 5 கோடி மக்களுடைய குடிநீர் ஆதாரம் விஷமாகி வருகிறது. எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இந்நதியில் கலக்கக்கூடிய  சாயப்பட்டறை கழிவுகளை தடுத்து நிறுத்துவதற்கு முன் வர வேண்டும். சேலம் கந்தன்பட்டி பைபாஸ் அருகே அமைக்கப்பட்டுள்ள திருமணிமுத்தாறு பாலத்திற்கு கீழ் பல்வேறு கழிவு பொருட்களால் அடைபட்டு கிடக்கிறது. அடைப்புகளை சீர் செய்யாததால் கழிவுகள் தேங்கி நிற்கிறது. இதனை உடனடியாக அகற்றுவதற்கு முன்வர வேண்டும்.

குறிப்பாக சேலம் மாநகராட்சியில் நான்கு இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் எதுவுமே செயல்படாத நிலையில் முடங்கி கிடக்கிறது. 30 ஆண்டுகளுக்கு மேலாக திருமணிமுத்தாறு கழிவுநீர் கால்வாயாக மாறியதால் சேலம் நகரத்தில் மக்கள் வாழ முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக சீரமைக்க முன்வர வேண்டும். 

தமிழகத்தில் சுற்றுச்சூழல் துறை ஊழல் துறையாக மாறியதின் விளைவு தமிழ்நாட்டில் ஓடக்கூடிய பல்வேறு நதிகளும் கழிவுநீர் கால்வாயாக மாறி வருகிறது. சுற்றுச்சூழல் துறையை ஒழுங்குபடுத்த முன்வர வேண்டும்.இதனை வலியுறுத்தி சேலத்தில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை விரைவில் நடத்த உள்ளோம்.

காவிரியின் குறுக்கே சட்டவிரோதமாக மேக்கேதாட்டு அணை கட்டுவதை எதிர்த்தும், ராசி மணல் அணை கட்டுவதற்கு திட்டமிட வலியுறுத்தியும் தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளையும் விவசாயிகளையும் பொதுமக்களையும் ஒன்றுபடுத்துகிற விதமாக பூம்புகாரில் செப்டம்பர் 20 ல் பிரச்சார பயணத்தை துவங்க இருக்கிறோம்.  21ஆம் தேதி மாலை சேலத்திற்கு வருகை தர உள்ளோம். 23 ஆம் தேதி சென்னையில் பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்று ஆதரவு தெரிவிக்க உள்ளார்கள்.  அனைத்து விவசாயிகளும் பங்கேற்க்க வேண்டுகிறோம்.

தமிழக முதலமைச்சர் தேர்தல்  வாக்குறுதி கொடுத்த அடிப்படையில் கூட்டுறவு கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய முன் வர வேண்டும். 
எட்டு அமைச்சர்கள் விவசாயிகள் சங்க தலைவர்களோடு நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ஒரு லட்சம் வரையிலும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதற்கு முரணாக அரசாணைகள் வெளியிடுவது விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உடனடியாக உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளை தமிழக முதலமைச்சர் கடனை தள்ளுபடி செய்து பாதுகாக்க முன் வர வேண்டும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இந்த ஆய்வு மற்றும் செய்தியாளர் சந்திப்பின்போது மாநில பொருளாளர் கொண்டலாம்பட்டி எம் தங்கராஜ் மண்டல செயலாளர் தங்கவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்தி: க.சண்முகவடிவேல்.

Source link