“திருமாவளவனை முதல்வராக்க முயற்சி செய்தோம்” – டி.டி.வி. தினகரன் பரபரப்பு பேட்டி!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (24.10.2026) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “அன்றைக்கு கம்யூனிஸ்டுகளோ, திருமாவளவனோ ஆதரவளிக்காமல் விட்டிருந்தால், முதல்வர் விஜய்யால் ஆட்சி அமைத்திருக்க முடியாது. அக்கட்சிக்கு107 பேர்தான் இருக்கிறார்கள். அப்பொழுது திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முயற்சி செய்ய மாட்டோம் என்று ஸ்டாலின்  வெளிப்படையாகச் சொன்னார். திமுக ஆதரவை நாங்கள் கேட்கவில்லை.

விஜய்யைப் பார்த்து நான் இதைத்தான் சொல்லுவேன். ‘பரலோகத்தில் இருக்கிற பரமபிதா போன்ற நேர்மையானவரே, தேவதூதரே, அவதார புருஷரே, உங்களால் ஆட்சி அமைக்க முடியாமல் போய்விட்டது. அப்படிப் போயிருந்தால், நாங்கள் சாமானியர்களாகிய எங்களுக்கு ஆட்சிப் பொறுப்பை நீங்கள் எப்படி வழங்குவீர்கள்? எங்கள் எம்எல்ஏக்கள் அனைவரும் திருட முயற்சி செய்கிறார்கள்; அது தவறு, அதைச் செய்யாமல் எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்’ என்றுதான் கேட்போம் என்று சொன்னேன். அப்பொழுது கம்யூனிஸ்டுகள்,  எடப்பாடி பழனிசாமியை ஆதரித்தால் அது பாஜகவை ஆதரிப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கிவிடும் என்பதால் அவர்கள் பின்வாங்கினார்கள்.

அதற்கு அடுத்த முன்மொழிவுதான், நண்பர் திருமாவளவனை முதலமைச்சராக்குவதற்கு எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைவரும் முயற்சி செய்தோம். இது தவெக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக அல்ல. தவெகவால் ஆட்சி அமைக்க முடியாமல் போகின்ற பட்சத்தில், எங்கள் எம்எல்ஏக்களைத் திருட முயற்சி செய்கின்ற பட்சத்தில், அதையெல்லாம் தடுத்து நிறுத்தி அவர்களுக்குப் பாடம் புகட்டுவதற்காக, நாங்கள் அதிமுக ஆட்சி, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமைக்க வேண்டும் என்று முயற்சி செய்தது உண்மை.

அதற்கு தவெகவிடம்தான் நாங்கள் ஆதரவு கேட்பதாக இருந்தோம். அவர்களால் ஆட்சி அமைக்க முடியாத நிலையில், அதிமுக எந்தக் காலத்திலும் திமுகவோடு செல்ல முடியாது. திமுகவும் எந்தக் காலத்திலும் அதிமுகவுடன் கூட்டுச் சேரவே முடியாது. அதுதான் உண்மை. இதில் விஜய் குளிர்காய நினைக்கிறார். நடிகர் தனுஷ் அதிமுகவில் இணைந்தால் மகிழ்ச்சி” எனத் தெரிவித்துள்ளார்.