திருவாரூர் நகரில் தஞ்சாவூர்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை (NH-83) பகுதியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) விரைவில் இரண்டு மேம்பாலங்களை கட்ட உள்ளது. பழமையானதாகி, சேதமடைந்துள்ள தற்போதைய பாலங்களுக்குப் பதிலாக இந்த இரண்டு புதிய மேம்பாலங்களும் கட்டப்பட உள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இந்த புதிய மேம்பாலங்களில் ஒன்று திருவாரூர் ரயில் நிலையம் அருகிலும், மற்றொன்று அதிலிருந்து 2 கி.மீ. தொலைவிலும் அமைய உள்ளது. இரண்டு மேம்பாலங்களையும் கட்டுவதற்குத் தேவையான நிலம் போதுமான அளவில் உள்ளது” என்று அதிகாரிகள் தெரிவித்தனர். திருவாரூர் நகரின் மாற்றுப்பாதைப் பகுதியில் அமைக்கப்பட உள்ள இந்த இரண்டு மேம்பாலங்களும் மொத்தம் ரூ.77.67 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளன. இதற்கான ஒப்பந்தப்புள்ளியும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பணிகள் 18 மாதங்களுக்குள் நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளன. குறிப்பிடத்தக்க வகையில், திருவாரூர் நகரைச் சுற்றி மாற்றுப்பாதை அமைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ள நிலையிலும், தஞ்சாவூர்– நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் இந்த இரண்டு மேம்பாலங்களையும் கட்ட முடிவு செய்துள்ளது.
இந்த ஆண்டு மே மாதம், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ரூ.1,427.61 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலை கொண்ட மாற்றுப்பாதை அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இந்த முக்கியமான திட்டத்தின் மூலம் திருச்சி, கோயம்புத்தூர் போன்ற முக்கிய தொழில் மையங்களுக்கும் காரைக்கால், நாகப்பட்டினம் போன்ற துறைமுக நகரங்களுக்கும் இடையிலான போக்குவரத்து இணைப்பு மேம்படும். இதன் மூலம் பிராந்திய பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிக்கும் என்றும் அவர் அப்போது தெரிவித்திருந்தார்.
இந்த மாற்றுப்பாதை தண்டலை முதல் அடியக்கமங்கலம் வரை 14.9 கி.மீ. தொலைவுக்கு அமைய உள்ளது. ஆதிப்புலியூர், ஆண்டிப்பாளையம், கிடாரம்கொண்டான், பள்ளிவரமங்கலம், பெரும்புகலூர், இளவங்கார்குடி மற்றும் அனைவடபதி காலனி உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வழியாக இந்தச் சாலை செல்லும். மாற்றுப்பாதை பணிகள் நிறைவடைந்ததும், திருவாரூர் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறையும். மேலும், பயண நேரம் குறைவதுடன், அதிக மக்கள் தொகை மற்றும் வணிகப் பகுதிகளில் இருந்து வாகனப் போக்குவரத்து மாற்றி அமைக்கப்படுவதால் சாலைப் பாதுகாப்பும் மேம்படும்.
இந்தத் திட்டத்தை வடிவமைத்தல், கட்டுமானம், இயக்குதல் மற்றும் ஒப்படைத்தல் (Design, Build, Operate and Transfer) அடிப்படையில், ஹைப்ரிட் அன்யூட்டி முறையில் செயல்படுத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளியை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டிருந்தது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்ததாரருக்கு ஏற்கனவே பணி வழங்குவதற்கான விருப்பக் கடிதம் (Letter of Intent) வழங்கப்பட்டுள்ளது. விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட தஞ்சாவூர்–நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த மாற்றுப்பாதை முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால், அப்போது நிலம் கையகப்படுத்தும் பணி முழுமையாக நிறைவடையாததால் மாற்றுப்பாதை அமைக்கும் பணி தொடங்கப்படவில்லை. தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடைந்துள்ளது.
தஞ்சாவூர்– நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையின் இருவழிச் சாலைப் பகுதி சமீபத்திய ஆண்டுகளில் மேம்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 80 கி.மீ. நீளமுள்ள இந்த தேசிய நெடுஞ்சாலை காவிரி டெல்டா பகுதி வழியாகச் செல்கிறது. தஞ்சாவூர், திருவாரூர், வேளாங்கண்ணி மற்றும் நாகூர் உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தலங்களை இணைக்கும் இந்த நெடுஞ்சாலையில் ஆண்டு முழுவதும் அதிக அளவிலான வாகனப் போக்குவரத்து காணப்படுகிறது.
