தீபாவளி நெருங்கும் வேளையில் 3 நாள் ரேஷன் ஊழியர் தொடர் போராட்டம்: பொதுமக்களுக்கு உணவுப் பொருள் விநியோகம் பாதிக்குமா?

தீபாவளி நெருங்கும் வேளையில், பொதுமக்கள் ரேஷன் கடையில் அரசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை போன்ற உணவுப் பொருட்களை வாங்க வேண்டும் என்று திட்டமிட்டு வரும் நிலையில், ரேஷன் கடை ஊழியர்கள் 3 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதனால், பொதுமக்களுக்கு உணவுப் பொருள் விநியோகம் பாதிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்களை விநியோகிக்க 35,000-க்கும் மேற்பட்ட நியாயவிலை கடைகள் செயல்படுகின்றன. இந்த ரேஷன் கடைகள் மூலம் சுமார் 2 கோடிக்கு மேலான குடும்ப அட்டைதாரர்கள் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. இதில், அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் ரேஷன் கடை ஊழியர்களின் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 2-ம் தேதி முதல் 3 நாட்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது. 

தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நியாய விலைக்கடைகளில் பணிபுரியும் நியாய விலைக்கடை பணியாளர்களின் நீண்ட கால கோரிக்கையான அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் பொட்டலமாக வழங்குதல் பலதுறை கட்டுப்பாட்டில் செயல்படும் பொது விநியோகத் திட்டத்திற்கென தனித்துறையை உருவாக்க வேண்டும்.

அனைத்து நியாய விலைக்கடைகளுக்கும் எடையாளரை நியமனம் செய்யப்பட வேண்டும்.

கல்வித் தகுதிக்கு ஏற்ற ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற நவம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் (02.11.2026 முதல் 04.11.2026 வரை) தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும்” என்று அறிவித்துள்ளது.

மேலும், இந்த வேலை நிறுத்தப் போராட்டம் முதல் நாள் (02.11.2026) வேலை நிறுத்தப் போராட்டம் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் என்றும் 2-வது நாள் (03.11.2026) வேலை நிறுத்தப் போராட்டம் கோட்ட அளவிலும், 3-வது நாள் (04.11.2026) வேலைநிறுத்தப் போராட்டம் வட்ட அளவிலும் ஆர்ப்பாட்டமும் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் 12 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள், பேச்சுவார்த்தைகள் நடத்தியும் எந்த தீர்வும் எட்டப்படாததால் இந்த வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் 12 அம்ச கோரிக்கைகள்:

12-ம் வகுப்பு கல்வித் தகுதியுடைய விற்பனையாளருக்கு இன்றும் ஒரு அலுவலக உதவியாளர் ஊதியம் கூட பெற முடியாமல் நிலவி வருகிறது.

10-ம் வகுப்பு கல்வித் தகுதி உள்ள எடையாளருக்கும் (Packers) கிராம உதவியாளர் ஊதியம் கூட பெற முடியாமல் இருக்கிறார்கள்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக எடை தராசும், நியாய விலைக்கடைகளில் உள்ள விற்பனை முனையத்தையும் புளுடூத் முறையில் இணைத்து சரியான எடையில் அனைத்து பொருள்களும் பொட்டலமாக வழங்க வேண்டும்.

அனைத்து நியாய விலைக்கடைகளுக்கும் எடையாளரை நியமனம் செய்யப்பட வேண்டும்.

ரேஷன் கடைகளுக்கு விநியோகிக்கப்படும் பொருட்களின் தரம் மற்றும் கொள்முதல் நடைமுறைகளில் உள்ள குறைபாடுகளுக்கு, கடைநிலை ஊழியர்களை மட்டும் தண்டிப்பதோ அல்லது பழிவாங்குவதோ கூடாது.

நியாய விலைக்கடை பணியாளருக்கு தனியாக நிதி ஒதுக்கி மாதாமாதம் ஊதியம் வழங்க வேண்டும்.

ஓய்வூதியம் ரூ.10,000 வழங்கப்பட வேண்டும்.

நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகளை மேம்படுத்த பொது விநியோகத் திட்டத்திற்கென (பி.டி.எஸ்) தனியாக ஒரு துறையை உருவாக்க வேண்டும்.

நியாய விலைக்கடைகளில் கழிப்பிட வசதி செய்து தரப்பட வேண்டும்.

அவர்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்யும் வருங்கால வைப்பு நிதியை அலுவலகத்தில் செலுத்தப்பட வேண்டும்.

ரேஷன் கடை ஊழியர்களின் இந்த கோரிக்கைகள் குறித்து தமிழக அரசிடமிருந்து எவ்வித சாதகமான முடிவுகளும் வராததால், நவம்பர் 2 முதல் நவ.4-ம் தேதி வரை 3 நாள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இதனால், தீபாவளி நெருங்கும் வேலையில், தமிழ்நாட்டில் ரேஷன் கடை ஊழியர்களின் இந்த 3 நாள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தால், ரேஷன் கடைகள் மூடப்படுமா? பொதுமக்களுக்கு உணவுப் பொருள் விநியோகம் செய்யப்படுவது பாதிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து ரேஷன் கடை ஊழியர் ஒருவரிடம் பேசியபோது,  “பொதுமக்களுக்கு உணவுப் பொருள் விநியோகம் பாதிக்காது. எல்லா ரேஷன் கடைகளும் மூடப்படாது. ஏனென்றால், ரேஷன் கடை ஊழியர்களுக்காக 6-7 சங்கங்கள் இருக்கின்றன. இதில் ஒரு சங்கம் மட்டும்தான் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளதாக கேள்விப்படுகிறோம். அதனால், எல்லா ரேஷன் கடைகளும் மூடப்படாது” என்று கூறினார்.

அதே நேரத்தில் ரேஷன் கடை ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையையும் அவர்களின் வேதனைகளையும் அந்த ஊழியர் பகிர்ந்துகொண்டார்.  கொடவுனில் இருந்து வரும் அரிசி மூட்டையின் எடை அளவு பை எடையுடன் சேர்த்து 50 கிலோ 600 கிராம் இருக்க வேண்டும். ஆனால், ரேஷன் கடைக்கு வரும் மூட்டைகளின் எடை பையுடன் சேர்த்து 47 கிலோ அல்லது 48 கிலோதான் இருக்கிறது. இதற்கு ரேஷன் கடை ஊழியர்கள் பொறுப்பேற்க வேண்டி உள்ளது. அதனால், அரிசி மூட்டை ரேஷன் கடைக்கு வரும்போது 50 கிலோ 600 கிராம் இருக்க வேண்டும் என்று கேட்டு வருகிறோம்.

அதே போல, கொடவுனில் இருந்து ரேஷன் கடைகளுக்கு வரும் அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் போன்ற உணவுப் பொருட்களை லோடு இறக்குவதற்கு ரேஷன் கடை ஊழியர்கள்தான் ஒரு லோடுக்கு 1,000 ரூபாய் கொடுத்து வருகிறார்கள்.

அதே போல ரேஷன் கடைகளில் விற்பனையாளரே எடையும் போடுபவராக உள்ளார். இதனால், மிகுந்த சிரமமாக உள்ளது. கை ரேகை வைக்கும் கருவியும் எடை இயந்திரமும் கணெக்ட் செய்யப்பட்டிருக்கிறது. உணவுப் பொருள் சரியான எடை இருக்கும்போது ஓகே ஆகும். அதனால், எடை போடுவதற்கு நாங்களே வேறு யாருடைய உதவியை நாட வேண்டியுள்ளது. அவர்களுக்கு நாங்கள் அன்றைக்கான கூலி கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. அதனால், அனைத்து ரேஷன் கடைகளிலும் எடையாளரை பணி அமர்த்த வேண்டும்.

ஒருவர் ரேஷன் கடையில் விற்பனையாளராக வேலைக்கு சேர்ந்தால் முதல் ஆண்டு பணிமுடித்தால் 13 ஆயிரம் ரூபாய்தான் சம்பளமாக வருகிறது. 8-9 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு ரூ.23,000 சம்பளம் வருகிறது. இது ஒருவர் குடும்பம் நடத்த போதுமானதாக இல்லை. அதனால், குறைந்த பட்சம் ரூ.40,000 சம்பளமாக வழங்க வேண்டும்.” என்று அந்த ஊழியர் ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கைகளையும் வேதனைகளையும் கூறினார்.

Source link