“தீவிரப் புயலாக வலுவடைய வாய்ப்புள்ளது” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ‘ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்’ கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து, இன்றைய தினமான அக்டோபர் 25ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 05:30 மணி அளவில் அதே பகுதியில், நிலை கொண்டிருந்தது.

இது ஸ்ரீ விஜய புரம் (அந்தமான் தீவுகள்) வட-வடமேற்கே சுமார் 450 கி.மீ தொலைவிலும், விசாகப்பட்டினத்திற்கு (ஆந்திரப் பிரதேசம்) கிழக்கு-தென்கிழக்கே 820 கி.மீ தொலைவிலும், காகிநாடாவிற்கு (ஆந்திரப் பிரதேசம்) கிழக்கு-தென்கிழக்கே 910 கி.மீ தொலைவிலும், மச்சிலிப்பட்டினத்திற்கு (ஆந்திரப் பிரதேசம்) கிழக்கு-தென்கிழக்கே 1010 கி.மீ தொலைவிலும் மற்றும் பாபட்லாவிற்கு (ஆந்திரப் பிரதேசம்) கிழக்கே 1080 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டிருந்தது.

இது பெரும்பாலும் மேற்கு நோக்கி நகர்ந்து, அக்டோபர் 26 அதிகாலையில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மேலும் வலுவடைந்து ‘புயலாக’ மாறக்கூடும். பின்னர், இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்டோபர் 27 காலைக்குள் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ‘தீவிர புயலாக’ வலுவடைய வாய்ப்புள்ளது.

அதன்பிறகு, இது வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுவடைந்து ‘மிகத் தீவிர புயலாக’ மாறி, அக்டோபர் 28 காலை நேரத்தில் ஆந்திரப் பிரதேச கடற்கரையை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியை அடையக்கூடும். இது 2026 அக்டோபர் 28 முற்பகலுக்குள், பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரையைக் கடக்க அதிக வாய்ப்புள்ளது. இப்புயல் கடக்கும் போது அதிகபட்சமாக மணிக்கு 115-125 கி.மீ வேகத்திலும், இடையிடையே மணிக்கு 140 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.