நாகையை உலுக்கிய வழக்கு : மேலும் ஒருவர் கைது!

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை (DRI) அதிகாரிகளுக்கு கடந்த 16ஆம் தேதி தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், அப்பகுதியில் சோதனை நடத்திய அதிகாரிகள், சர்வதேச சந்தையில் பல கோடி ரூபாய் மதிப்புடைய சுமார் 137 கிலோ  போதைப்பொருளைப் பறிமுதல் செய்தனர்.

இந்தக் கடத்தல் விவகாரம் தொடர்பாக, தவெக முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினரும் வழக்கறிஞருமான பூபாலன், சுகன், மணிகண்டன் மற்றும் சதீஷ் ஆகிய நான்கு பேரை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே, கடந்த 23ஆம் தேதி ராஜ்குமார் என்பவர் இந்த வழக்கில் ஐந்தாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். திருச்சியில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு அவருக்குச் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து, அவர் அதிகாரிகள் முன்பு ஆஜரானார்.

அதனைத் தொடர்ந்து, ராஜ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 25ஆம் தேதி அவரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என நாகப்பட்டினம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, நாகையிலிருந்து இலங்கைக்குப் போதைப்பொருள் கடத்த முயன்றதாகக் கூறப்படும் வழக்கில், ஏற்கெனவே நான்கு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது ஐந்தாவது நபராக ராஜ்குமாரும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.