துணிகளுக்கு நடுவே இருந்த பொட்டலம்; திறந்ததும் அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்

இத்தாலியின் முக்கிய நகரமான டுரினில் பிரபலமான ’காசெல்லே’ விமான நிலையம் உள்ளது. இங்கு, சுங்கத்துறை மற்றும் நிதித்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் தொடர்ந்து அங்கு வந்த பயணிகளின் உடைமைகளைப் பரிசோதித்தனர். 

அப்போது, அமெரிக்காவில் இருந்து இஸ்தான்புல் வழியாக இத்தாலிக்கு வந்த,  இத்தாலி பயணி ஒருவரின் உடைமைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அப்போது, அவரது சூட்கேஸில் துணிகளுக்கு நடுவே வண்ண காகிதத்தால் சுற்றப்பட்ட ஒரு மிகப் பெரிய பொட்டலம் இருந்தது. அதனைப் பிரித்துப் பார்த்தபோது அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.  

அதில், ஒரு ராட்சத முதலையின் காய்ந்த தலை பதுக்கிவைக்கப்பட்டு இருந்தது. விமான நிலையத்தில் உள்ள ஸ்கேனர்களில் சிக்காமல் தப்பிக்க, இவ்வாறு பதுக்கப்பட்டு கொண்டுவந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்த முதலை தலையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.    

பறிமுதல் செய்யப்பட்ட இந்த தலையானது அழியும் நிலையில் உள்ள குறிப்பிட்ட முதலை இனத்தைச் சேர்ந்த, ஒரு முதலையின் தலை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தலையை நினைவுப் பரிசாக எடுத்து வந்ததாக, அந்தப் பயணி தெரிவித்துள்ளார். இருப்பினும், அவர் மீது கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 20,000 முதல் 2,00,000 யூரோக்கள் (தோராயமாக ரூ.22 லட்சம் முதல் 2.2 கோடி) வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் முதல் 1 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  

இதனிடையே, மியாமி மற்றும் புளோரிடா உள்ளிட்ட பகுதிகளில், நினைவுப் பரிசு கடைகளில் இது போன்ற காய்ந்த முதலைத் தலைகள் விற்கப்படுகிறது. எனினும், அவற்றைச் சர்வதேச எல்லைகளைத் தாண்டி எடுத்துச் செல்வது சட்டவிரோதமானது என வனவிலங்கு பாதுகாப்பு அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. 

Source link