சென்னை:‘தமிழக பல்கலைகளில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவிகளுக்கு, தேடுதல் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இருந்து, ஒருவரை தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டும்’ என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
தமிழக பல்கலைகளுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை, மாநில அரசுக்கு வழங்கும் சட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை, ரத்து செய்த உச்ச நீதிமன்றம், இது சம்பந்தமான வழக்கை மீண்டும் விசாரித்து முடிவெடுக்க, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கில், உயர்நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை, எந்த நியமனங்களும் மேற்கொள்ளப்படாது என, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்திருந்தது.
தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்தை எதிர்த்து, திருநெல்வேலியை சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாஜலபதி தாக்கல் தாக்கல் செய்த வழக்கு, மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
அதேபோல, தமிழக பல்கலைகளில் காலியாக உள்ள துணைவேந்தர்கள் பதவிகளை நிரப்ப, உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தலைமையில், உயர் அதிகார குழுவை நியமிக்கக்கோரி, செங்கல்பட்டை சேர்ந்த பாஸ்கர் என்பவர் சார்பில், வழக்கறிஞர் பி.ஜெகன்நாத் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்குகள், தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தன.
அப்போது துணைவேந்தர்கள் நியமிக்க கோரிய, மனுதாரர் பாஸ்கர் தரப்பில், மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா ஆஜராகி, ”மாநிலத்தில் மொத்தம் உள்ள, 20 பல்கலைகளில், 15 பல்கலைகளுக்கு துணைவேந்தர்கள் இல்லாததால், கல்வி தொடர்பான கொள்கை முடிவுகளை எடுக்க முடியவில்லை. நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல், பல்கலை பணிகள் ஸ்தம்பித்துள்ளன. இதற்கு தீர்வு காண வேண்டும்,” என்றார்.
அதற்கு பதில் அளித்த தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், ”உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அளித்த உத்தரவாதம் காரணமாக, பல்கலைகளில் துணைவேந்தர்கள் நியமனம் முடங்கி உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், தேடுதல் குழு பரிந்துரைத்துள்ள மூன்று பேரில், ஒருவரை தேர்வு செய்ய, தமிழக அரசை அனுமதிக்க வேண்டும்.
”துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை, அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்பட்டு உள்ளதால், அந்த சட்டம் இன்னும் அமலில் உள்ளதாகவே கருத வேண்டும். அந்த சட்டத்தின் அடிப்படையில் செயல்பட அனுமதித்தால் மகிழ்ச்சி,” என்றார்.
இதையடுத்து, இந்த வழக்குகள் தொடர்பாக, விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என, தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு தெரிவித்தது.
