துபாய் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் தாமதம்: டில்லி ஏர்போர்ட்டில் பயணிகள் போராட்டம்

புதுடில்லி: டில்லியில் இருந்து துபாய் செல்லும் இரு விமானங்கள் 29 மணி நேரம் தாமதமானதால் அதிருப்தி அடைந்த பயணிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் குதித்தனர்.

தலைநகர் டில்லியில் இருந்து துபாய்க்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் எஸ்ஜி 5111 மற்றும் எஸ்ஜி 5105 ஆகிய இரு பன்னாட்டு விமானங்கள் நேற்று துபாய் செல்ல இருந்தது. ஆனால் இவ்விரு விமானங்களின் புறப்பாடானது, கிட்டத்தட்ட 29 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானது.

விமானங்களின் பழுது காரணமாக புறப்படும் நேரம் பலமுறை மாற்றி அமைக்கப்பட்டது. தொடர்ந்து இதுபோன்ற நிகழ்வுகள் நீடித்ததால் அதிருப்தி அடைந்த 200க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையத்தில் திடீர் போராட்டத்தில் குதித்தனர்.

பயணிகளுக்கு உரிய உணவு மற்றும் தங்குமிடம் ஏற்பாடு செய்யவில்லை. இதனால் அதிருப்தி அடைந்து விமான நிலைய வளாகத்தில் தரையில் அமர்ந்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பயண கட்டணத்தை திருப்பி தருமாறும் கோரினர்.

அப்போது விமான நிறுவன ஊழியர்கள் யாரும் அங்கு வராததால், விமான நிலையத்தின் ஊழியர்கள் தலையிட்டு அவர்களுக்கு உரிய ஏற்பாடுகளை செய்து தந்தனர்.

இந்நிலையில், ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கை;தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக விமானங்கள் தாமதம் ஆனது. அதற்காக வருந்துகிறோம். பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்று விமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் அது பற்றிய அறிவிப்புகள் வெளியாகும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Source link